சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றி கர்நாடக ஆயுதப்படை போலீஸ் குவிப்பு


சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றி கர்நாடக ஆயுதப்படை போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2017 2:45 AM IST (Updated: 17 Feb 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றி கர்நாடக ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றி கர்நாடக ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறையில் சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனிக்கோர்ட்டு கூறிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் அடைக்கப்பட்டார்கள்.

முன்னதாக நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹாரா வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்த சிட்டி சிவில் கோர்ட்டில் சரண் அடைய சசிகலா வந்த போது, அவரது ஆதரவாளர்கள் கார்களின் கண்ணாடிகள் உடைக் கப்பட்டன. இதன் காரணமாக பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

பலத்த பாதுகாப்பு

இதற்கிடையே தமிழகத்தில் சசிகலாவின் ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் இன்று(வெள்ளிக்கிழமை) அ.தி.மு.க.வினர் அதிக எண்ணிக்கையில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றி நேற்றும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்லும் முக்கிய சாலையில் இரும்பால் ஆன தடுப்பு வேலிகளை போலீசார் அமைத்து இருந்தார்கள். மேலும் மெயின் ரோட்டில் இருந்து சிறைக்கு செல்லும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. அத்துடன் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு இருந்த பகுதியிலேயே அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அந்த வாகனங்களை போலீசார் தீவிர சோதனை செய்த பின்பே உள்ளே செல்ல அனுமதித்தார்கள்.

கர்நாடக ஆயுதப்படை போலீசார்

எல்லாவற்றுக்கும் மேலாக பரப்பன அக்ரஹாரா சிறை அருகே ஒசரோடு பகுதியில் 2 பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதுதவிர தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கய்யா மேற்பார்வையில் பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்லும் ஓசூர் ரோடு ஜங்ஷன் பகுதியிலும் ஒரு பிளட்டூன் கர்நாடக ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை பார்க்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் நேற்று பரப்பன அக்ரஹாராவுக்கு வந்திருந்தார்கள். ஆனால் அவர்களை சிறைக்கு செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

சசிகலாவின் ஆதரவாளர்கள் கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாலும், அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கவும் பரப்பன அக்ரஹாரா சிறையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story