ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்தது என்ன? ஓய்வு பெற்ற நீதிபதி, சேலத்தில் முதல்கட்ட ஆய்வு போலீஸ் அதிகாரிகள் விளக்கம்


ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்தது என்ன? ஓய்வு பெற்ற நீதிபதி, சேலத்தில் முதல்கட்ட ஆய்வு போலீஸ் அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 17 Feb 2017 4:30 AM IST (Updated: 17 Feb 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்தது என்ன? என்று விசாரணை கமி‌ஷன் நீதிபதி சேலத்தில் நேற்று மாலை முதல்கட்ட ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

சேலம்,

மாணவர்கள் போராட்டம்


தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்றக்கோரி கடந்த மாதம் தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தினர். சேலத்தில் போராட்டம் 6 நாட்கள் நடந்தது.

இந்த போராட்டத்தின்போது கடந்த மாதம் 19–ந் தேதி பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரெயில் சேலம் பெரியார் மேம்பாலத்தின்கீழ் சிறை பிடிக்கப்பட்டது. மேலும் ரெயிலும் சேதமாக்கப்பட்டது. போராட்டத்தின்போது வீராணம் சத்யாநகரை சேர்ந்த யோகேஸ்வரன்(வயது17) மின்சாரம் தாக்கி பலியானார். போராட்டத்தின் இறுதிநாளில் சென்னை மெரினாவில் கலவரம் ஏற்பட்டது. அதேபோல் அலங்காநல்லூர் மற்றும் கோவை உள்ளிட்ட இடங்களில் போலீசாரின் தடியடி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது நடந்தது என்ன? என்பது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டார்.

முதல்கட்ட ஆய்வு


விசாரணை அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் முதல்கட்ட ஆய்வு நடத்துவதற்காக நேற்று மாலை சேலம் வந்தார். சேலம் அஸ்தம்பட்டி விருந்தினர் மாளிகையில், போராட்ட சமயத்தில் போலீசாரின் செயல்பாடுகளையும், இது தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் குறித்தும், கைது செய்யப்பட்டவர்கள் விவரம் குறித்தும் மாவட்ட கலெக்டர் சம்பத், மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார், துணை கமி‌ஷனர்கள் ஜோர்ஜி ஜார்ஜ், ராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது மாணவர்களின் போராட்டத்தின்போது போலீசார் நடந்துகொண்ட தன்மை குறித்தும், மாணவர்களுக்கு அரணாகவே செயல்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்திய கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரவுண்டானா, ரெயில் சிறை பிடிக்கப்பட்ட பெரியார் மேம்பாலத்தின்கீழ் உள்ள தண்டவாள பகுதியிலும் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் ஆய்வுசெய்தார். அப்போது போலீசாரிடம் சில விவரங்களை அவர் கேட்டறிந்தார். அதற்கு துணை போலீஸ் கமி‌ஷனர் ஜோர்ஜி ஜார்ஜ் விளக்கமளித்தார். ஆய்வின்போது சங்ககிரி உதவி கலெக்டர் பால்பிரின்ஸிலி ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) தமிழ்ராஜன், தாசில்தார் லெனின் உள்பட அதிகாரிகள் உடன் சென்றனர்.

அதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:–

விரைவில் விசாரணை


ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது, சேலத்தில் ரெயில் சிறைபிடிக்கப்பட்ட இடம், கலெக்டர் அலுவலக ரவுண்டானா ஆகிய இடங்களை பார்வையிட்டேன். அடுத்த கட்டமாக மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக கருத்து கேட்கப்படும். அதற்கான தேதி குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு விரைவில் விசாரணை நடத்தப்படும். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். விசாரணையின்போது எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும்.

சேலத்தில் ரெயிலை சிறைபிடித்து சேதப்படுத்தியது தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்களிடம் தேவைப்பட்டால் மட்டுமே விசாரணை மேற்கொள்வேன். சென்னையில் வாகனங்களுக்கு தீ வைப்பு, மீனவர் குப்பம் பகுதியில் ஏற்பட்ட கலவரம் குறித்தும் முழுமையான விசாரணை நடத்திய பின்னர் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

சேலத்தில் சிறைபிடிக்கப்பட்ட ரெயிலின்மீது ஏறி போராடிய இளைஞர் ஒருவர், மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார். முழுமையான விசாரணைக்கு பின்னர், அவரின் குடும்பத்திற்கு இழப்பீடு கிடைக்குமா? என சொல்லமுடியும். அடுத்ததாக மதுரைக்கு சென்று ஆய்வுசெய்ய இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story