மூதாட்டியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் பிடிபட்டனர் தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு


மூதாட்டியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் பிடிபட்டனர் தப்பி ஓடியவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Feb 2017 4:30 AM IST (Updated: 17 Feb 2017 2:53 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளையடிக்க முயன்ற 2 பேர் பிடிபட்டனர். தப்பி ஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஜவுளி வியாபாரி

ஈரோடு கொல்லம்பாளையம் மோளக்கவுண்டன்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 50). ஜவுளி வியாபாரி. இவர் ஈஸ்வரன் கோவில் வீதியில் கடை வைத்து உள்ளார். இவருடைய மனைவி மகேஸ்வரி, ஜெயச்சந்திரனின் தாயார் கோகிலாம்பாள் (70), பாட்டி லட்சுமிஅம்மாள். இவர்கள் ஜெயச்சந்திரனுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். வழக்கமாக ஜெயச்சந்திரன் காலையில் கடைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்புவார். எனவே பகல் பொழுதில் பெண்கள் 3 பேர் மட்டுமே வீட்டில் இருப்பார்கள்.

இந்தநிலையில் நேற்று மதியம் மகேஸ்வரி வீட்டில் இருந்து புறப்பட்டு அருகில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். வீட்டில் கோகிலாம்பாள் டி.வி. பார்த்துக்கொண்டு இருந்தார். லட்சுமி அம்மாள் ஒரு அறையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தார். கடைக்கு சென்ற மகேஸ்வரி பிற்பகல் 2.30 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினார்.

2 பேர் பிடிபட்டனர்

அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு இருந்தது. வழக்கமாக உள்பக்கமாக பூட்டுபோடும் பழக்கம் இல்லாததால் மகேஸ்வரி சந்தேகம் அடைந்தார். அவர் சத்தம்போட்டுக்கொண்டே, வீட்டின் பின்புறம் சென்றார். பின்புற கதவும் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. எனவே அவர் மீண்டும் முன்பக்கமாக வந்து கதவை பலமாக தட்டினார். மகேஸ்வரியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினரும் அங்கு வந்தனர். அப்போது பின்பக்க கதவு திறக்கும் சத்தம் கேட்டது.

உடனடியாக மகேஸ்வரியும் உடன் வந்தவர்களும் ஓடிச்சென்றனர். அப்போது மர்மநபர் ஒருவர் வீட்டின் உள்ளிருந்து வெளியே தப்பி ஓடினார். அதைப்பார்த்து அனைவரும் ‘திருடன் திருடன்’ என்று கத்தினார்கள். அப்போது வீட்டுக்குள் இருந்து மேலும் 2 பேர் வெளியே ஓடி வந்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் விரட்டிச்சென்று பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

விசாரணை

இதற்கிடையே வீட்டுக்குள் சென்றபோது ஜெயச்சந்திரனின் தாயார் கோகிலாம்பாள் கையில் காயம் அடைந்து ரத்தம் சொட்டச்சொட்ட தரையில் விழுந்து கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பாட்டி லட்சுமிஅம்மாள் அறையிலேயே படுத்திருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிடிபட்ட 2 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரம் வருமாறு:-

வீடுகளில் நோட்டம்...

பிடிபட்ட ஒருவர் ஈரோட்டை அடுத்து உள்ள அவல்பூந்துறை பகுதியை சேர்ந்த துளசிமணி என்பவருடைய மகன் பாலமுருகன் (36). இன்னொருவர் ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சேகர் (41). இவர்கள் 2 பேரும் இன்னொரு நபருடன் சேர்ந்து பகல் நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றி வருவார்கள். அப்போது பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்து உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று 3 பேரும் கல்யாணசுந்தரம் வீதியில் வீடுகளை நோட்டமிட்டபடி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஜெயச்சந்திரனின் வீடு தனியாக இருப்பதை பார்த்து கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளதா? என்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்து இருந்தது. உள்ளே பார்த்தபோது கோகிலாம்பாள் மட்டும் டி.வி. பார்த்துக்கொண்டு இருப்பதை கண்டனர்.

உடனே 3 பேரும் வீட்டுக்குள் புகுந்து கதவுகளை பூட்டினார்கள். அதிர்ச்சி அடைந்த மூதாட்டி கோகிலாம்பாள் என்ன ஏது என்று கேட்பதற்குள் அவரை தாக்கினார்கள். இந்த நிலையில் மகேஸ்வரி திரும்பி வந்து சத்தமிட்டதால் 3 பேரும் தப்பி ஓடினார்கள். இதில் 2 பேர் பொதுமக்களின் பிடியில் சிக்கிக்கொண்டனர்.

இந்த விவரம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 2 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தப்பி ஓடிய நபரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோகிலாம்பாளை எதற்காக தாக்கினார்கள். வீட்டில் இருந்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? என்பது குறித்து உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி சூரம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story