ரூ.41¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் நடராஜன் வழங்கினார்


ரூ.41¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் நடராஜன் வழங்கினார்
x
தினத்தந்தி 17 Feb 2017 2:54 AM IST (Updated: 17 Feb 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் தாலுகா கொண்டுலாவி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.41¼ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் வழங்கினார்.

முதுகுளத்தூர்,

மக்கள் தொடர்பு முகாம்

முதுகுளத்தூர் தாலுகா கொண்டுலாவி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. பரமக்குடி சப்-கலெக்டர் சமீரன், வேளாண்மை இணை இயக்குனர் அரிவாசன், கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் மோகன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முதுகுளத்தூர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், வழங்கல் அலுவலகம், புதுவாழ்வு திட்டம், தொழில் மையம், தாட்கோ அலுவலகம், தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகியவை சார்பில் பயனாளிகளுக்கு ரூ.41 ¼ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடன் உதவிகளை மாவட்ட கலெக்டர் நடராஜன் வழங்கினார்.

தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணும் விதமாகவும், கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மாதந்தோறும் ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், அந்ததிட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கி கூறப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 160 முன் மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டுஉள்ளன.

சாலை

கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பாக கொண்டுலாவி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1.46 கோடி மதிப்பில் கிடாத்திருக்கையில் இருந்து கொண்டுலாவி, எஸ்.பி.கோட்டை வழியாக சித்திரங்குடி வரையிலான சாலை அமைக்கவும், ரூ.5 லட்சம் மதிப்பில் கொண்டுலாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தரைதளத்தை சரிசெய்து தண்ணீர் வசதி மற்றும் கழிப்பறை அமைக்கவும், ரூ.3 லட்சம் மதிப்பில் கொண்டுலாவி கிராமத்தில் குடிநீர் இணைப்பு அமைக்கவும், ரூ.2 லட்சம் மதிப்பில் எஸ்.பி.கோட்டை கிராமத்தில் குடிநீர் இணைப்பு அமைக்கவும், ரூ.15,000 மதிப்பில் எஸ்.பி.கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மெயின்கேட் அமைக்கவும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது. விரைவில் அனைத்து பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து கிடாத்திருக்கை கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். பின்னர் கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர் அறுவடை பரிசோதனை பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பழனியம்மாள் உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

Next Story