பொது சுத்திகரிப்பு நிலையங்களை பார்வையிட்ட வங்காளதேச அதிகாரிகள்


பொது சுத்திகரிப்பு நிலையங்களை பார்வையிட்ட வங்காளதேச அதிகாரிகள்
x
தினத்தந்தி 17 Feb 2017 4:15 AM IST (Updated: 17 Feb 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையங்களில் வங்காளதேச அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர்,

பொது சுத்திகரிப்பு நிலையங்கள்

திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாய, சலவை, பிரிண்டிங் பட்டறை உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவுகளால் தொடர்ந்து சுகாதார சீர் கேடு ஏற்பட்டு வந்ததை தொடர்ந்து பல சாய, சலவை ஆலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதனால் பெரும் வர்த்தக இழப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பொது சுத்திகரிப்பு நிலையத்தை திருப்பூர் தொழில்துறையினர் நிறுவினார்கள்.

இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலம் சாயக்கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை பார்வையிடுவதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த தொழில்துறையினரும், அரசு அதிகாரிகளும் திருப்பூர் வந்து பொது சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு செல்கின்றனர். இவர்கள் திருப்பூரில் பின்பற்றப்படும் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து அதை தங்கள் நாடுகளிலும் செயல்படுத்தி வருகின்றனர்.

வங்காளதேச குழு பார்வை

இந்த நிலையில் திருப்பூரில் செயல்பட்டு வரும் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்ற விவரங்களை நேரில் சென்று அறிந்துகொள்ள வங்காளதேச அரசு அந்த நாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது. இதையடுத்து வங்காளதேச நாட்டு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முதன்மை உதவியாளர் பர்ஜனா தலைமையில் சுற்றுச்சூழல் துறை உயர் அதிகாரிகள் கொண்ட குழு நேற்று திருப்பூருக்கு வந்தது.

இவர்களை திருப்பூர் சாய ஆலைகள் சங்க தலைவர் எஸ்.நாகராஜன் மற்றும் அருள்புரம் ஈஸ்டன் பொது சுத்திகரிப்பு நிலையங்களின் நிர்வாகிகள் வரவேற்றனர்.

இந்த குழுவினர் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களை பார்வையிட்டனர். பின்னர் அருள்புரம் மற்றும் ஈஸ்டன் பொது சுத்திகரிப்பு நிலையங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.

பின்னர் வங்காளதேச குழுவினருக்கு பொது சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்கள். சுத்திகரிப்பு நிலையங்களில் பின்பற்றப்படும் நவீன முறைகள், செலவினங்கள் குறித்தும், இதற்கு அரசின் நிதி உதவிகள் குறித்தும் கேட்டறிந்தனர். 

Next Story