வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 17 Feb 2017 4:30 AM IST (Updated: 17 Feb 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் வாலிபரை சரமாரி வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

வாலிபர் வெட்டிக்கொலை

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் அரசுக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் தைலமர காடுகள் உள்ளன. இந்த தைலமரக்காட்டு பகுதி கிழக்கு பகுதி, மேற்கு பகுதி என 2 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் தலா ஒரு வனவர் வனத்துறை சார்பில் நியமிக்கப்பட்டு, காலை மற்றும் மாலை வேளைகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் மேற்கு பகுதி வனவர் செந்தில்மணி தைலமரக்காட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்த பகுதியில் உடலில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் ஒரு வாலிபர் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து திருக்கோகர்ணம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்த வாலிபர் சுமார் 30 வயது மதிக்கத்தக்கவர் என்பதும், அவரது உடலில் சரமாரியாக வெட்டு காயங்கள் இருந்ததால் அவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

வெட்டுக்காயங்கள்

இதைத்தொடர்ந்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட வாலிபர் ரோஸ் கலர் சட்டையும், நீல கலர் ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். மேலும் அவரது தலையில் 3 இடங்களில் வெட்டுக்காயங்களும், தோள் பட்டையில் வெட்டுக்காயமும், மேலும் அவரது 2 விரல்களும் துண்டிக்கப்பட்டு இருந்தன.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு மார்சல் என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

அடையாளம் தெரிந்தது

மோப்பநாய் கொலை செய்யப்பட்ட வாலிபர் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த படி பாலன்நகர் வரை ஓடி சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு தடயவியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். அப்போது பிணத்தின் அருகே ஒரு செல்போன் கிடந்தது. அந்த செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் வெட்டி கொலை செய்யப்பட்டவர் மதுரை மாவட்டம் பறவை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் கனகராஜ்(வயது26) என்று தெரிய வந்தது. கனகராஜ் எப்படி இங்கு வந்தார் என்று தெரியவில்லை. அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த கொலை சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கனகராஜ் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story