3,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை


3,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Feb 2017 4:15 AM IST (Updated: 17 Feb 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கோமதி தலைமையிலான போலீசார் 3,200 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலை

கள்ளக்குறிச்சி அருகே அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை அமைந்துள்ளது. இங்குள்ள நீரோடைகளில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி விழுப்புரம் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு வாகனங்களில் கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட காவல்துறை மற்றும் வனத்துறையினர் கல்வராயன்மலை பகுதி கிராமங்களில் சாராய வேட்டையில் ஈடுபடுவதும், சாராய ஊறல்களை பறிமுதல் செய்து அழித்தும் வருகின்றனர். இருப்பினும் சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.

சாராய வேட்டை

இந்த நிலையில் கல்வராயன்மலை இன்னாடு, ஈச்சங்காடு, கிளாக்காடு, மணியார்பாளையம் ஆகிய கிராம வனப்பகுதிகளில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கோமதி, கரியாலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா, சின்னசேலம் சப்- இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை முதல் மாலை வரை கல்வராயன்மலை கிராமங்களில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

பறிமுதல்

அப்போது ஈச்சங்காடு வனப்பகுதி நீரோடையில் அப்பகுதியை சேர்ந்த மர்மநபர்கள் சிலர் தலா 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 32 பேரல்களில் 3 ஆயிரத்து 200 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், சாராயம் காய்ச்சுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சாராய ஊறல்களை பறிமுதல் செய்து, அதே இடத்தில் கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்ச வனப்பகுதி நீரோடையில் சாராய ஊறல்களை அமைத்ததாக ஈச்சங்காட்டை சேர்ந்த ஜெயராமன், சின்னதுரை, ராஜீவ்காந்தி, பழனியம்மாள், ஜெயபால் ஆகிய 5 பேர் மீது கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story