மாநகராட்சி தேர்தல்: மும்பையில் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர்
மாநகராட்சி தேர்தலையொட்டி மும்பையில் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பை,
மாநகராட்சி தேர்தலையொட்டி மும்பையில் அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்கள் வீடு, வீடாக சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
மும்பை மாநகராட்சி தேர்தல்மும்பை மாநகராட்சிக்கு வருகிற 21–ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 27–ந்தேதி தொடங்கி 3–ந்தேதி வரை நடந்தது. மும்பையில் உள்ள 227 வார்டுகளில் சிவசேனா, பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மராட்டிய நவநிர்மாண் சேனா உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 271 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தல் களத்தில் சிவசேனா, பா.ஜனதா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், நவநிர்மாண் சேனா கட்சிகள் தனித்தனியாக கோதாவில் இறங்கி உள்ளன.
சூறாவளி பிரசாரம்இந்த பிரதான கட்சிகள் மும்பை மாநகராட்சியை கைப்பற்றும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. மும்பை மாநகராட்சி தேர்தலையொட்டி அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து தங்களுக்கு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
அப்போது தாங்கள் வெற்றி பெற்றால் வார்டுக்கு தாங்கள் செய்ய உள்ள திட்டங்கள் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
கட்சி தலைவர்கள் பிரசாரம்இதுதவிர வேட்பாளர்கள் வாக்காளர்களை கவரும் யுக்திகளையும் கையாண்டு தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தாங்கள் போட்டியிடும் வார்டுகளில் மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தி வருகின்றனர். மும்பை முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடக்கும் தேர்தல் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி ஆதரவு திரட்டி வருகிறார்கள். சிவசேனா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, யுவசேனா தலைவர் ஆதித்ய தாக்கரே ஆகியோர் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசி வருகின்றனர்.
பா.ஜனதா வேட்பாளர்களுக்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மும்பை பா.ஜனதா தலைவர் ஆஷிஸ் செலார் உள்ளிட்டோர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தாராவியில் குஷ்பு, நக்மாஅண்மையில் சயான் கோலிவாடாவில் நடந்த பா.ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு பேசினார்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் உள்ளிட்ட அக்கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள். தாராவியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டு பேசினார்.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார், நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேயும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக ஓட்டு வேட்டை நடத்தி வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தாராவியில் தேர்தல் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதில் நடிகைகள் குஷ்பு, நக்மா ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள்.
சுயேட்சை வேட்பாளர்கள்மும்பை மாநகராட்சி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் போட்டியிடுகிறார்கள். அவர்களும் தங்களுக்கு ஆதரவு திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தங்களை வெற்றி பெற செய்தால் வார்டில் தாங்கள் கொண்டு வந்து செயல்படுத்தும் திட்டங்கள் பற்றி பொதுமக்களிடம் கூறி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. இதன் காரணமாக மும்பையில் உள்ள அனைத்து வார்டுகளும் திருவிழா காலம் போல காட்சி அளிக்கின்றன.