சீமை கருவேல மரங்களை அகற்றுவது உள்பட மராமத்து பணிகள் செய்ய 34 ஏரிகள் தேர்வு
சீமை கருவேல மரங்களை அகற்றுவது உள்பட மராமத்து பணிகள் செய்ய 34 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது உள்பட மராமத்து பணிகள் செய்ய 34 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் ராமன் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை விளக்கி பேசினர். அதற்கு அதிகாரிகள் பதிலளித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசுகையில், ‘ஏரிகள் மற்றும் பட்டா நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற 13 மாவட்டங்களுக்கு சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் மராமத்து பணிகள் செய்ய 34 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பட்டா நிலத்தில் உள்ள கருவேல மரங்களை அவர்களாகவே அகற்றிக்கொள்ள வேண்டும்’ என்றார்.
பொதுப்பணித்துறை அதிகாரி அன்பரசு பேசுகையில், ‘வேலூர் மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு 34 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் குறைந்தது ரூ.10 லட்சம் செலவில் ஏரி, நீர்வரத்து கால்வாய், வரப்புகளில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், மதகுகளை சரிசெய்தல், சேதமான ஏரி கரைகளை பலப்படுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும். இதில் 10 சதவீத தொகையை ஏரியின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் செலுத்த வேண்டும். அவர்கள் பணமாக செலுத்தவில்லையென்றால் உடல் உழைப்பை பயன்படுத்தலாம், இல்லையென்றால் நீரினை பயன்படுத்துவோர் சங்கம் முலம் செலுத்தலாம்’ என்றார்.
17 உலர் தீவன கிடங்குகள்கால்நடைத்துறை உதவி இயக்குனர் மனோகரன் பேசுகையில், ‘மாவட்டத்தில் வறட்சியை முன்னிட்டு கால்நடைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 17 உலர் தீவன கிடங்குகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கிலோ 2 ரூபாய் வீதம் ஒரு மாட்டிற்கு ஒரு நாளைக்கு 3 கிலோ உலர் தீவனம் வழங்கப்படும்.
பசுந்தீவன பற்றாக்குறையை போக்க 600 ஏக்கரில் தீவன சோளம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒரு விவசாயி குறைந்தது ஒரு ஏக்கராவது பயிரிடவேண்டும். இந்த திட்டத்தில் நிலத்தை சமன் செய்வது, ஏர் உழுவது உள்பட அனைத்து பணிகளுக்கும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதேபோன்று மார்ச் 1–ந் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் தங்கள் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்றார்.
பயிர் பெருக்கு திட்டம்அவரைத் தொடர்ந்து பேசிய வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அண்ணாதுரை, தற்போது சிறப்பு பயிர் பெருக்கு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் குறைந்த தண்ணீரில் அதிக மகசூல் பெறுவதாகும். இதற்காக 750 ஏக்கரில் செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உளுந்து, பாசிப்பயிர் போன்ற பயிறு வகைகளை பயிரிடலாம். இதற்கு இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் என்.ஓ.சி. வழங்குவதற்கு பணம் கேட்பதாக புகார் தெரிவித்தனர். மேலும் சர்க்கரை ஆலைகள் 3 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், உடனடியாக பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
காட்டு பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்க வனத்துறை அதிகாரிகள் சான்றிதழ் கேட்கிறார்கள். ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் சான்றிதழ் கொடுக்க மறுக்கிறார்கள் என்று புகார் தெரிவித்தனர்.
அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.