அ.தி.மு.க. பிரமுகர் ஜி.ஜி.ரவி கொலை வழக்கில் ரவுடி குப்பனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
அ.தி.மு.க. பிரமுகர் ஜி.ஜி.ரவி கொலை வழக்கில் சரண் அடைந்த ரவுடி குப்பனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதியளித்துள்ளது.
வேலூர்,
அ.தி.மு.க. பிரமுகர் ஜி.ஜி.ரவி கொலை வழக்கில் சரண் அடைந்த ரவுடி குப்பனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதியளித்துள்ளது. இதற்காக அவர் திருச்சியில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார்.
கோர்ட்டில் சரண்வேலூர் மாநகராட்சி முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் ஜி.ஜி.ரவி. தொழில் அதிபரான இவர் கடந்த 12–ந் தேதி காட்பாடியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது மண்டபத்தின் முன்பு மர்ம நபர்களால் வெட்டிகொலை செய்யப்பட்டார்.
ரவுடி குப்பன், தனது தந்தையை கொலை செய்ததாக ஜி.ஜி.ரவியின் மகன் கோகுல் விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 15–ந் தேதி ஜி.ஜி.ரவி கொலை வழக்கில் ரவுடி குப்பன் திருச்சி கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிஅவரை போலீஸ் காவிலில் எடுத்து விசாரிக்க விருதம்பட்டு போலீசார் வேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தனர். இதற்காக நேற்று குப்பனை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக திருச்சியில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
பின்னர் அவர் பகல் 3 மணியளவில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண் 3–ல் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு வெற்றிமணி அனுமதியளித்தார். அதைத் தொடர்ந்து ரவுடி குப்பனை போலீஸ் விசாரணைக்காக விருதம்பட்டு போலீசார் அழைத்து சென்றனர்.
ரவுடி குப்பன் கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து நேற்று காலை முதல் வேலூர் கோர்ட்டு வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.