கீழ்பென்னாத்தூரில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


கீழ்பென்னாத்தூரில் குடிநீர் கேட்டு சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2017 2:30 AM IST (Updated: 17 Feb 2017 8:20 PM IST)
t-max-icont-min-icon

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க ஆழ்துளை கிணறுகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கீழ்பென்னாத்தூர்,

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் வசிக்கும் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க ஆழ்துளை கிணறுகள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பருவமழை பொய்த்ததன் காரணமாக ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு வார்டுகளில் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 2 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் 2 மற்றும் 5–வது வார்டுகளில் கடந்த 8 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யாததால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் திண்டிவனம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story