கடையம் அருகே கடனா அணைப்பகுதியில் மீண்டும் கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தைப்புலி
கடையம் அருகே கடனா அணைப்பகுதியில் மீண்டும் கூண்டுக்குள் சிறுத்தைப்புலி சிக்கியது.
கடையம்,
கடையம் அருகே கடனா அணைப்பகுதியில் மீண்டும் கூண்டுக்குள் சிறுத்தைப்புலி சிக்கியது.
காட்டு விலங்குகள் அட்டகாசம்நெல்லை மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சிக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கடனா அணை உள்ளது. கடனா அணை அருகே பெத்தான்பிள்ளை குடியிருப்பு (குருவப்பத்து) பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன. காட்டு விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவது வாடிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக சிறுத்தைப்புலியானது, தோட்டங்களில் காவலுக்கு இருக்கும் நாய்களையும், ஊருக்குள் புகுந்து ஆடுகளையும் கடித்து கொன்று சாப்பிடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதுபற்றி பொதுமக்கள் புகார் தெரிவிப்பதும், அதன் பேரில் வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தைப்புலியை பிடிப்பதும், பின்னர் அதனை பாதுகாப்பாக வனப்பகுதியில் விட்டுவருவதும் தொடர் கதையாகி வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் பெத்தான்பிள்ளை குடியிருப்பு பகுதியில் சிறுத்தைப்புலி பல நாட்கள் அட்டகாசம் செய்த நிலையில் டிசம்பர் 31–ம் தேதி சிறுத்தைப்புலி சிக்கியது. இந்நிலையில் மீண்டும் சிறுத்தைப்புலி உலவுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் வனத்துறையினர் காட்டுக்குள் கண்காணிப்பு கேமிராவை பொருத்தியிருந்தனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வந்து, மீண்டும் அதே இடத்தில் கூண்டு வைத்தனர்.
சிறுத்தைப்புலி சிக்கியதுஇந்நிலையில் நேற்று அதிகாலையில் கடந்த முறை சிக்கிய சிறுத்தைப்புலியை விட பெரிய சிறுத்தைப்புலி கூண்டில் சிக்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. உடனடியாக அம்பை வனத்துறை துணை இயக்குநர் ஜெயராஜ் உத்தரவின் பேரில் கடையம் வனச்சரக அலுவலர் இளங்கோ, வனவர் மோகன், வனக்காப்பாளர் சுந்தரேசன், பூல்பாண்டி, மணி, வனக்காவலர் ராமச்சந்திரன், செல்லத்துரை, வேட்டை தடுப்பு காவலர்கள் முத்துகுமார், மணிகண்டன், பசுங்கிளி, பேச்சிமுத்து, மாரியப்பன், வேல்சாமி, மனோஜ்குமார், பரமசிவன், முகம்மது இஸ்மாயில் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து வந்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெத்தான்பிள்ளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் திரண்டு வந்து சிறுத்தைப்புலியை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். கூண்டின் அருகே பொதுமக்கள் சென்று பார்க்கும் போது, பிடிபட்ட சிறுத்தைப்புலியானது கடிக்க வருவது போன்று மிகவும் ஆக்ரோஷமாக உறுமியது.
கூண்டில் சிக்கிய சிறுத்தைப்புலியை வனத்துறையினர் ஜேசிபி உதவியுடன் டிராக்டரில் ஏற்றினர். பின்னர் பத்திரமாக முண்டன்துறை பகுதியில் உள்ள முதலியார் என்ற இடத்தில் கொண்டுபோய்விட்டனர். கூண்டுக்குள் சிக்கிய சிறுத்தைப்புலியானது, சுமார் 10 வயதுள்ள பெரிய அளவிலான பெண் சிறுத்தைப்புலி ஆகும்.
8–வது சிறுத்தைப்புலி
கடையம் வனச்சரக அலுவலர்கள் ஏற்கனவே 7–முறை சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடித்துள்ளனர். முதலாவதாக கடையம் வனச்சரக அலுவலகத்துக்கு உட்பட்ட வடமலைபட்டியில் கிணற்றுக்குள் விழுந்த சிறுத்தைப்புலியை வலைகட்டி பிடித்தனர். 2–வதாக பெத்தான்பிள்ளை குடியிருப்பில் சங்கரன் என்பவர் தோட்டத்திலும், 3–வதாக அதே இடமான வனத்துறை சாலைஓடை பகுதியிலும், 4–வதாக கோவிந்தபேரியிலும், 5 மற்றும் 6–வது, 7–வது முறையாக வனத்துறை சாலைஓடை பகுதியிலும் பிடிபட்டுள்ளது. தற்போது 8–வது முறையாக மீண்டும் அதே இடத்தில் சிறுத்தைப்புலி பிடிபட்டுள்ளது. இதே இடத்தில் 5–வது முறையாக பிடிபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மாத்திற்கு ஒருமுறை சிறிய, பெரிய அளவில் இதே இடத்தில் சிறுத்தைப்புலி மீண்டும் மீண்டும் சிக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.