எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசை விட்டு விலகியது சரியல்ல மல்லிகார்ஜுன கார்கே சொல்கிறார்
எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசை விட்டு விலகியது சரியல்ல என்று பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கார்கே கூறியுள்ளார்.
பெங்களூரு,
எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரசை விட்டு விலகியது சரியல்ல என்று பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் கார்கே கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கலபுரகியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
கடிவாளம் விழுந்துள்ளதா?உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏழை மக்கள் மற்றும் சிறிய வியாபாரிகள், விவசாயிகள் கஷ்டத்தில் சிக்கியுள்ளனர். பயங்கரவாதத்தை தடுப்பது, கருப்பு பணத்தை ஒழிப்பது, கள்ள நோட்டுக்கு கடிவாளம் போட வேண்டும் என்பற்காக இந்த ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
ஆனால் இன்று இவற்றுக்கு எல்லாம் கடிவாளம் விழுந்துள்ளதா?. ரூபாய் நோட்டு ரத்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்ட திருத்தத்தின்படி ஐதராபாத்–கர்நாடகம் பகுதியின் வளர்ச்சிக்கு மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஏதாவது குறைகள் இருந்தால் அவை சரிசெய்யப்படும்.
எல்லா அதிகாரத்தையும்...சிலருக்கு (எஸ்.எம்.கிருஷ்ணா) காங்கிரஸ் கட்சி எல்லா அதிகாரத்தையும் கொடுத்துள்ளது. ஆயினும் அது போதவில்லை என்று கூறி அவர்கள் கட்சியை விட்டு விலகியுள்ளனர். இது சரியல்ல. சிலர் கட்சியில் இருந்து கொண்டே ஆட்சிக்கு எதிராக பேசுவது சரியல்ல.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.