கூலித்தொழிலாளி மர்மச்சாவு


கூலித்தொழிலாளி மர்மச்சாவு
x
தினத்தந்தி 18 Feb 2017 3:45 AM IST (Updated: 18 Feb 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

சின்னாளபட்டி அருகே கூலித்தொழிலாளி மர்மமான முறையில் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தார்.

கிணற்றுக்குள் பிணம்

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 32). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர், தனது மோட்டார் சைக்கிளில் வீட்டை விட்டு வெளியே சென்றார். இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் அவரை தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலை அருகே, கலிக்கம்பட்டி பிரிவில் உள்ள ஒரு கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் ராஜாவின் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டிருந்தது. தண்ணீர் இல்லாத அந்த கிணற்றுக்குள் ராஜா பிணமாக கிடந்தார். இதுகுறித்து சின்னாளபட்டி போலீசார் மற்றும் ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு படையினர், கயிறு கட்டி கிணற்றில் இருந்து ராஜாவின் உடலை மீட்டனர். இதேபோல் சின்னாளபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மச்சாவு

கிணற்றுக்குள் பிணமாக கிடந்த ராஜாவின் உடலில் காயங்கள் இருந்தன. இதனால் அவரை யாராவது அடித்து கொலை செய்து உடலை கிணற்றுக்குள் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால், அவர் தவறி விழுந்ததில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கிணற்றின் அருகே உள்ள ஒரு மரத்தடியில் ராஜாவுடன், அவரது உறவினர் ஒருவர் பேசி கொண்டிருந்த ரகசிய தகவல் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனால் அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக ராஜாவின் தாயார் பார்வதி சின்னாளபட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மர்மமான முறையில் ராஜா இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன ராஜாவுக்கு பத்மாவதி என்ற மனைவியும், ஆதி (10) என்ற மகனும், சுகன்யா (6) என்ற மகளும் உள்ளனர். 

Next Story