போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பெண் தர்ணா


போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பெண் தர்ணா
x
தினத்தந்தி 18 Feb 2017 3:30 AM IST (Updated: 18 Feb 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் பெண் தர்ணாவில் ஈடுபட்டார்.

பெண்ணுக்கு மிரட்டல்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கார்மேகம் (வயது 32). இவருக்கும் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வள்ளுவபட்டியை சேர்ந்த நித்யா (27) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தநிலையில், கார்மேகத்தின் பெற்றோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு மணப்பாறை போலீஸ் நிலையத்தில் நித்யா புகார் அளித்தார்.

இந்த வழக்கு வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணை வேடசந்தூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டுக்கு வந்த நித்யாவிடம், வழக்கை வாபஸ் பெறச்சொல்லி கார்மேகத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மிரட்டியுள்ளனர்.

போலீஸ் விசாரணை

மேலும் ரூ.1 லட்சம் வரதட்சணையாக கொடுத்தால் மட்டுமே கார்மேகத்துடன் சேர்ந்து வாழ முடியும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரியும் நேற்று நித்யா திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்தார். அப்போது திடீரென அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் குறித்து டி.ஐ.ஜி. கார்த்திகேயனிடம் கேட்டபோது, நித்யா கொடுத்த புகார் மனு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story