தேனி புதிய பஸ் நிலையத்தில் இருக்கை வசதியின்றி பயணிகள் பரிதவிப்பு


தேனி புதிய பஸ் நிலையத்தில் இருக்கை வசதியின்றி பயணிகள் பரிதவிப்பு
x
தினத்தந்தி 18 Feb 2017 3:00 AM IST (Updated: 18 Feb 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆங்காங்கே பயணிகள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

தேனி,

தேனி புறவழிச்சாலையில் புதிய பஸ் நிலையம் அமைந்து உள்ளது. இங்கிருந்து தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இங்கு மூணாறு, குமுளி பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் இடங்களில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதி அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால், திருநெல்வேலி, நாகர்கோவில், பழனி, திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருப்பூர், கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் நடைமேடை பகுதியில் பயணிகள் அமர்வதற்கு இருக்கை வசதி இல்லை. மேலும் இப்பகுதிகளில் நடைபாதையும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள், பஸ்களை நிறுத்தும் நடைமேடையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது.

இரவு நேரங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பயணிகள் இருக்கை வசதி இன்றி, தரையில் அமரும் நிலைமை உள்ளது. இதனால், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பண்டிகை காலங்கள், விடுமுறை நாட்களில் மக்களின் பரிதவிப்பு மேலும் அதிகரித்து காணப்படுகிறது.

எனவே புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆங்காங்கே பயணிகள் அமர்வதற்கான இருக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story