பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மனைவியை கொன்று நாடகமாடிய தொழிலாளி கைது பரபரப்பு தகவல்கள்
பாகல்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
பாகல்கோட்டை அருகே பாம்பு கடித்து பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மனைவியை கொன்று நாடகமாடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெண் சாவுபாகல்கோட்டை மாவட்டம் முதோல் தாலுகா சிசகண்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்துரு கலபனுரு(வயது 30). தொழிலாளி. இவருடைய மனைவி ரத்னவ்வா(25). இந்த நிலையில், வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ரத்னவ்வா இறந்து கிடப்பதாகவும், அவர் பாம்பு கடித்து இறந்ததாகவும், அவரை கடித்த பாம்பை அடித்து கொன்றதாகவும் சந்துரு கலபனுரு கிராமத்தினரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு கிராமத்தினர் சென்றனர். அப்போது, ரத்னவ்வா இறந்து கிடந்ததோடு, அவர் அருகே செத்துப்போன பாம்பு ஒன்று கிடந்தது. இருப்பினும், சிலருக்கு ரத்னவ்வாவின் சாவில் சந்தேகம் எழுந்தது. இதனால், அவர்கள் லோகாபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரத்னவ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கடந்த 14–ந் தேதி நடந்தது.
கணவர் கைதுஇந்த நிலையில், பிரேத பரிசோதனையில் ரத்னவ்வா பாம்பு கடித்து இறக்கவில்லை என்பதும், அவரை யாரோ கழுத்தை நெரித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று முன்தினம் ரத்னவ்வாவின் கணவர் சந்துருவை பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையின்போது இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டது. அதாவது சந்துரு தனது மனைவியை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, லோகாபுரா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்தனர்.
நாடகம்மேலும், கொலைக்கான காரணம் குறித்து சந்துருவிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–
ரத்னவ்வாவின் தங்கை(கொழுந்தியாள்) மீது சந்துருவுக்கு மோகம் ஏற்பட்டது. அவரை 2–வதாக திருமணம் செய்து கொள்ள சந்துரு முடிவு செய்தார். கொழுந்தியாளை 2–வது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். மேலும், கொலையை மறைக்கும் நோக்கத்தில் ரத்னவ்வா பாம்பு கடித்து இறந்ததாக கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார். இந்த நாடகத்தை அரங்கேற்றுவதற்காக முன்னதாகவே ஒருவரிடம் ரூ.1,000–க்கு பாம்பு ஒன்றை சந்துரு வாங்கி உள்ளார். பின்னர், திட்டமிட்டப்படி ரத்னவ்வாவை கொன்றுவிட்டு அவர் வைத்திருந்த பாம்பை கொன்று ரத்னவ்வாவின் உடல் அருகே போட்டு நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.