குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு புதிய குழாய்கள் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்


குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு புதிய குழாய்கள் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்
x
தினத்தந்தி 18 Feb 2017 3:00 AM IST (Updated: 18 Feb 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

4 வழிச்சாலை பணி காரணமாக குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு புதிய குழாய்கள் மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட குறிச்சி, குனியமுத்தூர்,மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஆழியாற்றில் தண்ணீர் எடுக்கப்பட்டு ஆச்சிப்பட்டி நீரேற்று நிலையம் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு வரப்படுகிறது.

பின்னர் குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிக்கு தினசரி 5 லட்சம் லிட்டர் குடிநீரும், குறிச்சி பகுதிக்கு 54 லட்சம் லிட்டர்குடிநீரும், குனியமுத்தூருக்கு 40 லட்சம் லிட்டர் குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.

தூண்கள் அமைக்கும் பணி

இந்த குடிநீர் குழாய்கள் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக குறிச்சி செல்லும் வழி வரை கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரமாகவே செல்கிறது. தற்போது இதே பகுதியில் உள்ள ரோடு 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. மேலும் கிணத்துக்கடவு பகுதியில் உயர்மட்ட மேம்பாலமும் கட்டப்படுகிறது. இதற்காக மெயின்ரோட்டில் 52 பிரமாண்ட தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக தொடங்கி நடைபெற்று வந்தன.

தற்போது மேம்பாலம் தூண்கள் அமையும் பகுதியில் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் செல்வதால் பல இடங்களில் தூண்கள் அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. இதனால் இந்த குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் சாலையோரம் அமைக்கப்பட உள்ளது.

புதிய குழாய்கள்

அதன் அடிப்படையில் 19 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குழாய் 4 வழிச்சாலை அமைக்கும் பகுதியில் செல்வதால் அதை அப்படியே விட்டு, விட்டு புதிய குழாய்களை சாலையோரம் பதிக்க உள்ளனர். இதற்காக 28 கோடியே 67 லட்ச ரூபாய் செலவில் புதிய குழாய்கள் கிரேன் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் விரைவில் குடிநீர் குழாய் சாலையோரம் பதிக்கும் பணி தொடங்க உள்ளது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சி-கோவை 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெறுகிறது. இந்த பாதை அமைய உள்ள பகுதியில் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் செல்கிறது.

இது சாலைப்பணிக்கு இடையூறாக இருக்கிறது. அதற்கு பதிலாக சாலையோரம் புதிதாக குழாய் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. அந்த பணிகள் முடிந்ததும் சாலை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெறும். தற்போது இதற்காக ராட்சத கிரேன் மூலம் குடிநீர் குழாய்கள் எடுத்து வரப்பட்டு கிணத்துக்கடவு பகுதியில் போடப்படுகின்றன. குடிநீர் குழாய்கள் பதித்த உடன் தங்கு தடையின்றி எந்த பாதிப்பும் இன்றி குறிச்சி-குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் செல்லும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story