குழந்தை பிறக்காத ஏக்கத்தில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை கணவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்


குழந்தை பிறக்காத ஏக்கத்தில் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை கணவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்
x
தினத்தந்தி 18 Feb 2017 2:05 AM IST (Updated: 18 Feb 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

குழந்தை பிறக்காத ஏக்கத்தில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

சிவமொக்கா,

குழந்தை பிறக்காத ஏக்கத்தில் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய கணவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.

குழந்தை பிறக்கவில்லை

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா சவந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 49). விவசாயி. இவருடைய மனைவி ஜெயந்தி (44). இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் சவந்தூர் பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை எனத் தெரிகிறது.

இதற்காக இவர்கள், பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், பல கோவில்களில் ஏறி, இறங்கியும் எந்த பயனும் இல்லை. இதன்காரணமாக கணவன்-மனைவி இருவரும் குழந்தை பிறக்காததை எண்ணி வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டனர்.

தம்பதி தற்கொலை


இந்த நிலையில், நேற்று காலையில் ஜெயந்தி தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதற்கிடையே வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த நாகராஜ், தனது மனைவியை காணாததை பார்த்து அதிர்ச்சி அடைந்து தோட்டம் முழுவதும் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பார்த்தபோது, ஜெயந்தி தண்ணீரில் பிணமாக மிதந்தார். மனைவி தற்கொலை செய்து கொண்டதால் மீளா துயரம் அடைந்த நாகராஜ், வீட்டுக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில் நேற்று மதியம் நாகராஜின் உறவினர் அவரை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது நாகராஜ் வீட்டுக்குள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ரிப்பன்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸ் விசாரணை

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தூக்கில் பிணமாக கிடந்த நாகராஜின் உடலை கைப்பற்றினர். மேலும் ஜெயந்தி கிணற்றில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீயணைப்பு படையினர் உதவியுடன் கிணற்றில் கிடந்த ஜெயந்தியின் உடலையும் கைப்பற்றினர். பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஒசநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில், குழந்தை பிறக்காத ஏக்கத்தில் ஜெயந்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும், மனைவி இறந்த துக்கத்தில் நாகராஜ் வீட்டுக்குள் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து ரிப்பன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சோகம்

குழந்தை பிறக்காத ஏக்கத்தில் மனைவி தற்கொலை செய்ததால், கணவரும் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story