ரூபெல்லா தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்து நகர்நல அதிகாரியை பெற்றோர்கள் முற்றுகை


ரூபெல்லா தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்து நகர்நல அதிகாரியை பெற்றோர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 18 Feb 2017 3:00 AM IST (Updated: 18 Feb 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் மாணவ -மாணவிகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்து நகர்நல அதிகாரியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரூபெல்லா தடுப்பூசி

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் கடந்த 6-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. பிறந்து 9 மாதம் முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி போடும் முகாம் நடந்து வருகிறது.

இதற்கிடையே தடுப்பூசி போடுவதால் பின்விளைவுகள் ஏற்படுவதாக வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றில் வதந்தி பரவியது. இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும், அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

முற்றுகை

இந்த நிலையில் பி.பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி நேற்று போடப்பட்டது. இதில் சில மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர்களின் அனுமதியின்றி ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்ததும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் ஒன்று திரண்டு வந்து தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு மாநகராட்சி நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். உடனே நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகளை மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் முற்றுகையிட்டு ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அனுமதி

இதைத்தொடர்ந்து அதிகாரிகளிடம் பெற்றோர்கள் கூறுகையில், ‘தடுப்பூசி போடுவதற்கு முன்பு பள்ளிக்கூட நிர்வாகம் சார்பில் மாணவ-மாணவிகள் மூலம் அனுமதி கடிதம் எங்களுக்கு கொடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் அல்லது வேண்டாம் என்பதை தேர்ந்து எடுக்க வேண்டும் என இருந்தது. ரூபெல்லா தடுப்பூசி போடுவதால் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று கருதினோம். இதைத்தொடர்ந்து நாங்கள் அனுமதி கடிதத்தில் தடுப்பூசி போட வேண்டாம் என்பதை தேர்வு செய்து கையெழுத்திட்டோம். ஆனால் எங்களுடைய அனுமதியின்றி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. எனவே முறையான அனுமதி பெறாமல் தடுப்பூசி போடக்கூடாது,’ என்று தெரிவித்தனர்.

இதையடுத்து பெற்றோர்களிடம் அதிகாரிகள் கூறுகையில், “மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் தடுப்பூசி போட மாட்டோம்”, என்றனர். இதில் சமாதானம் அடைந்த பெற்றோர்கள் தங்களுடைய முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து டாக்டர் சுமதியிடம் கேட்டபோது, அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். ஈரோட்டில் மாணவ-மாணவிகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போட எதிர்ப்பு தெரிவித்து நகர்நல அதிகாரியை பெற்றோர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story