சுத்தமான குடிநீர் கேட்டு திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகம் முற்றுகை


சுத்தமான குடிநீர் கேட்டு திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 18 Feb 2017 3:15 AM IST (Updated: 18 Feb 2017 2:51 AM IST)
t-max-icont-min-icon

சுத்தமான குடிநீர் கேட்டு திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சுத்தமான குடிநீர்

திருச்சி மாநகராட்சியில் பொன்மலை கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பட்டதம்மாள்தெரு, புதுத்தெரு, செம்பட்டு, என்.எம்.டி., எம்.கே.டி.காலனி, காமராஜ்நகர், முஸ்லிம்தெரு, கலைவாணர்தெரு உள்பட பல்வேறு தெருக்கள் உள்ளன. இந்த பகுதிகளில் வரக்கூடிய குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால் பொதுமக்களுக்கு தொற்றுநோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். சாக்கடைகளை தூர்வார வேண்டும். வாரம் இருமுறை கொசுமருந்து அடிக்க வேண்டும். பொதுகழிப்பறை கட்டி தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் பகுதியில் உள்ள மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

காலி குடங்களுடன் கோஷம்

அதன்படி நேற்று காலை ஜனநாயக வாலிபர் சங்க பொன்மலை பகுதிக்குழு செயலாளர் விஜேந்திரன் தலைமையில், அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் காலி குடங்களுடன் பொன்மலை கோட்ட அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். இது பற்றி ஏற்கனவே தகவல் தெரிந்து வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவர்கள் பொன்மலை கோட்ட அலுவலக நுழைவுவாயில் முன்பு நின்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

அப்போது சுகாதார வசதிகளை செய்து கொடுக்காவிட்டால் மாநகராட்சிக்கு கட்டிய வரித்தொகையை திரும்ப கொடுக்க வேண்டும் என்றும், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் முன்அறிவிப்பின்றி சாலை மறியலில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பின்னர் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story