பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் மளிகை கடைக்காரருக்கு, அதிகாரிகள் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு


பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில் மளிகை கடைக்காரருக்கு, அதிகாரிகள் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Feb 2017 3:30 AM IST (Updated: 18 Feb 2017 3:20 AM IST)
t-max-icont-min-icon

பத்திரப்பதிவு தொடர்பான வழக்கில், மளிகை கடைக்காரருக்கு, அதிகாரிகள் ரூ.23 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது.

காலிமனைக்கு பத்திரப்பதிவு செய்ய...

அரியலூர் பட்டுநூல்காரதெருவை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2-6-2014-ந் தேதி அரியலூர் பெரியார் நகர் பகுதியில் காலிமனையை ரவிசந்திரன் விலைக்கு வாங்கினார். மேலும் இந்த காலி மனைக்கான பத்திரத்தை பதிவு செய்வதற்காக அரியலூர் சார் பதிவாளரிடம் விண்ணப்பித்தார்.

ஆவணங்களை சரிபார்த்த சார்பதிவாளர், இந்திய முத்திரை கட்டண சட்டத்தின் கீழ் காலிமனையின் மதிப்பு குறைவாக இருக்கிறது என்று கூறி, அந்த ஆவணங்களை திருச்சியில் உள்ள சிறப்பு துணை கலெக்டருக்கு (முத்திரை கட்டணம்) அனுப்பி வைத்தார். அங்கு காலிமனை வாங்கியது தொடர்பான ஆவணங்கள் பார்வையிடப்பட்டு, ரூ.3 லட்சத்து 27 ஆயிரத்து 351-ஐ முத்திரை கட்டணமாக கட்ட வேண்டும் என்று ரவிசந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

ரூ.23 ஆயிரம் இழப்பீடு

இதையடுத்து பெரியார்நகர் பகுதியில் உள்ள காலி மனைக்கு தமிழக பத்திரப்பதிவு துறை அறிவித்திருந்த விலை குறித்த விவரங்களை கணினியில் பதிவிறக்கும் செய்து அதிகாரிகளிடம் ரவிசந்திரன் காண்பித்தார். அதன் பின்னரும் காலிமனை வாங்கியதற்கான பத்திரப்பதிவு ஆவணங்களை பதிவு செய்து வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டதால், இது குறித்து பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் ரவிசந்திரன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி கலியமூர்த்தி மற்றும் உறுப்பினர்கள் அன்பழகன், ஜெயலட்சுமி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், சேவை குறைபாடு காரணமாக ரவிசந்திரன் அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். எனவே திருச்சி சிறப்பு துணை கலெக்டர் (முத்திரை கட்டணம்), அரியலூர் சார்பதிவாளர் ஆகியோர் இழப்பீடாக ரூ.23 ஆயிரத்தை (வழக்கு செலவு உள்பட) ரவிசந்திரனுக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

Next Story