பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து


பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து
x
தினத்தந்தி 18 Feb 2017 3:45 AM IST (Updated: 18 Feb 2017 3:17 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் குப்பை கிடங்கில் எரிந்த தீயை தீயணைப்பு படை வீரர்கள் அணைத்தனர்.

குப்பை கிடங்கில் தீ விபத்து

பெரம்பலூர் நகராட்சியில் தற்போது சுமார் 1 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகள் பெரம்பலூர் நெடுவாசல் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு, மலைபோல் குவித்து வைக்கப்பட்டு, மறுசுழற்சி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை திடீரென நகராட்சி குப்பைக் கிடங்கில் தீப்பிடித்தது. இதில் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் கொழுந்து விட்டு எரிந்தன. இதனால் நகராட்சி குப்பை கிடங்கை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது.

இந்நிலையில் இது குறித்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) சதாசிவம் தலைமையில் முன்னணி தீயணைப்பாளர் செந்தில்குமார் மற்றும் இன்பராஜ், கல்யாணவாசன், வினோத்குமார் உள்ளிட்ட தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

3 மணி நேரம் போராட்டம்

அவர்கள் எரிந்து கொண்டிருந்த குப்பைகளில் தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடித்தனர். அப்போது குப்பைகளுக்குள் கண்ணாடி பாட்டில் உள்ளிட்டவை கிடந்ததால் வெடித்து சிதறின. மேலும் குப்பை கிடங்கில் இருந்து ஒரு வகையான துர்நாற்றம் வீசியது. தீப்பிடித்து எரிந்த குப்பைகளில் இருந்து கரும்புகை வெளியேறியதால், மூச்சுத்திணறல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. எனினும் தீயணைப்பு படை வீரர்கள் துணியை முகத்தில் கட்டிக்கொண்டு குப்பைகளை கிளறிவிட்டபடியே அதன் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இது குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தியதில், மர்ம நபர்கள் சிலர் சிகரெட்- பீடி போன்வற்றை குடித்து விட்டு அணைக்காமல் குப்பை கிடங்கில் போட்டு விட்டு சென்றதால் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நகராட்சி குப்பை கிடங்கு பணியாளர்களிடம் தீ விபத்து குறித்து நகராட்சி அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட குப்பை கிடங்கை ஒட்டியுள்ள பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. தீயணைப்பு படைவீரர்களின் துரித நடவடிக்கையால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும். குப்பை கிடங்கு தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரம்பலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story