பாரம்பரிய மீன்பிடி தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் மீனவர்கள் கலெக்டரிடம் மனு


பாரம்பரிய மீன்பிடி தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் மீனவர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 21 Feb 2017 4:30 AM IST (Updated: 20 Feb 2017 11:23 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பாரம்பரிய மீன்பிடி தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராமநாதபுரம்,

குறைதீர்க்கும்நாள் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மாயாகுளம் ஊராட்சி புல்லந்தை கிராமத்தில் இருந்து வந்திருந்த மகளிர் குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் தங்கள் கிராமத்தில் இந்த ஆண்டு நூறு நாள் வேலை திட்டத்தில் 30 நாட்கள் மட்டுமே வழங்கியதோடு, அதற்கான கூலியையும் முறையாக வழங்கவில்லை. எங்கள் கிராமத்திற்கு மின்விளக்கு, குடிநீர் வசதியும் இல்லை. எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறோம். எங்களின் கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

திருவாடானை யூனியன் மேலையூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் 350 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருவதாகவும், நிலத்தடி நீர் ஆதாரம் முற்றிலும் வற்றிய நிலையில் குடிநீர் குழாய்களும் இல்லாததால் குடிநீருக்காக அவதிஅடைந்து வருகிறோம். எனவே, குடிநீர் வசதி செய்து கொடுத்து தண்ணீர் தாகத்தை தீர்க்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

அத்துமீறல்

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் மீனவர்கள் அளித்த மனுவில், மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாரம்பரிய மீன்பிடிப்பு முறையிலான நாட்டுப்படகு, சிறுதொழில் மீன்பிடிப்பையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இதற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விசைப்படகு மீனவர்கள் அரசு தடையை மீறி 3 கடல் மைல் தொலைவிற்குள் வந்து மீன்பிடித்து வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்திது வருகின்றனர்.

குறிப்பாக பனைக்குளம், அழகன்குளம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 10–க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களிலும், கீழக்கரை தாலுகா பெரியபட்டினம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளிலும் விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி செயல்பட்டு வருகின்றனர். இதேபோன்ற பல பகுதிகளிலும் இந்த நிலை நீடித்து வருகிறது. எனவே, பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விசைப்படகு மீனவர்களின் அத்துமீறலை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

சட்டம்–ஒழுங்கு பிரச்சினை

பனைக்குளம் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் கணேசன் தலைமையில் மீனவர்கள் அளித்த மனுவில், பனைக்குளம், அழகன்குளம் ஊராட்சிக்குட்பட்ட அம்மன்கோவில் குடியிருப்பு, ஆனந்தபுரம், செட்டிபனை, சாமிதோப்பு, சோகையன்தோப்பு, புதுக்குடியிருப்பு, கிருஷ்ணாபுரம், புதுவலசை சத்திரம், இரணியன்வலசை, பழனிவலசை, முடிவீரன்பட்டினம் போன்ற கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதிகளில் சிலர் அரசு விதிகளை மீறி டிராக்டரில் ரோலர் எந்திரங்களை பொருத்தி மீன்பிடித்து கடல்வளத்தையும், மீன்வளத்தையும் மொத்தமாக அழித்து வருவதோடு, பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் சட்டம்– ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த விதிமீறலை உடனடியாக தடுக்க வேண்டும்,

பாரம்பரிய மீன்பிடி தொழிலை காப்பாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடராஜன் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Next Story