மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி 5 பேர் கைது
நவிமும்பையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கடந்த ஆண்டு 5 பேர் கும்பல் ரூ.3 கோடி மோசடி செய்தது.
நவிமும்பை,
நவிமும்பை சான்பாடா பகுதியை சேர்ந்தவர் நிதின்குமார்சிங். இவரது மகனுக்கு நவிமும்பையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ‘சீட்’ வாங்கி தருவதாக கடந்த ஆண்டு 5 பேர் கும்பல் ரூ.3 கோடி மோசடி செய்தது. இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மிராரோடு பகுதிகளை சேர்ந்த அபிஷேக் ஜா(25), சவுரப் சிங்(24), கவுரவ் சிங்(26), சுசில்குமார் வர்மா(30), ஹேமந்திரா சர்கார்(31) ஆகிய 5 பேர் இந்த மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை போலியாக தயார் செய்து விற்பனை செய்து வந்ததும் தெரிவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களது வங்கி கணக்கில் இருந்த ரூ.10 லட்சத்து 42 ஆயிரம், ஒரு கார், மோட்டார் சைக்கிள், 5 விலை உயர்ந்த செல்போன்கள், போலி வாக்காளர் அடையாள அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 10 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.