ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பிள்ளமுனிசாமப்பா எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா
ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பிள்ளமுனிசாமப்பா எம்.எல்.ஏ. திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பெங்களூரு
ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பிள்ளமுனிசாமப்பா எம்.எல்.ஏ. திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்.
8 எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்கர்நாடகத்தில் இருந்து டெல்லி மேல்–சபைக்கு நடந்த தேர்தலின்போது ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். இதையடுத்து அந்த 8 பேரும் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கோபாலய்யா எம்.எல்.ஏ. தான் தவறு செய்துவிட்டதாகவும், தன்னை மன்னித்து கட்சியில் சேர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை ஏற்பதாக தேவேகவுடா கூறினார். மற்ற 7 பேரை கட்சியில் சேர்த்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று தேவேகவுடா திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். அவர்கள் 7 பேரும் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளனர். இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பிள்ள முனிசாமப்பா எம்.எல்.ஏ.ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.வான பிள்ளமுனிசாமப்பா, தேவனஹள்ளி தொகுதியில் இருந்து கர்நாடக சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பிள்ளமுனிசாமப்பா நேற்று பெங்களூருவில் உள்ள விதான சவுதாவுக்கு வந்தார். அங்கு சபாநாயகர் கே.பி.கோலிவாட்டை நேரில் சந்தித்து, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி அதற்கான கடிதத்தை அவரிடம் வழங்கினார். கட்சிக்குள் எழுந்துள்ள கருத்து வேறுபாட்டால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சபாநாயகர், “பிள்ளமுனிசாமப்பா எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்து என்னிடம் கடிதம் வழங்கியுள்ளார். இதுபற்றி சட்ட விதிமுறைகளின்படி ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பேன்“ என்றார். தனது ராஜினாமாவுக்கு காரணம் என்ன என்பதை வெளிப்படுத்த பிள்ளமுனிசாமப்பா மறுத்துவிட்டார்.
தலைவர்கள் தீவிர முயற்சிதனது ராஜினாமா குறித்து பிள்ளமுனிசாமப்பா நிருபர்களிடம் கூறுகையில், “நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளேன். இதை உடனே அங்கீகரிக்குமாறு அவரிடம் கோரியுள்ளேன். ராஜினாமாவை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடம் இல்லை. எனது ராஜினாமாவுக்கு காரணம் என்ன என்பதை இப்போது பகிரங்கப்படுத்த விரும்பவில்லை“ என்றார்.
தன்னுடன் கலந்து ஆலோசனை நடத்தாமல் நிசர்கா நாராயணசாமி என்பவரை கட்சியில் சேர்த்து கொண்டதால் கடும் அதிருப்தி அடைந்து பிள்ளமுனிசாமப்பா பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிள்ளமுனிசாமப்பாவை சமாதானப்படுத்த அக்கட்சி தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அவரை கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்தினார்.
பெரும் பின்னடைவுபிள்ளமுனிசாமப்பா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து இருப்பதால், அடுத்த சட்டமன்ற தேர்தலில் சொந்த பலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்று கூறி வரும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.