100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்


100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்
x
தினத்தந்தி 25 Feb 2017 3:45 AM IST (Updated: 25 Feb 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், வேளாண் இணை இயக்குனர் தங்கச்சாமி உள்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தி பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மட்டுமே வறட்சி நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு நிலம் பாதிக்கப்பட்டுள்ளதோ அனைத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். நிலக்கோட்டை பகுதியில் 40 சதவீத தென்னை மரங்கள் பட்டுபோய்விட்டன. இதனை கணக்கெடுக்க அதிகாரிகள் வரவில்லை.

சீமைக்கருவேல மரம்

மாவட்டம் முழுவதும் வறட்சியால் பயிர்கள் கருகிவிட்டன. இந்தநிலையில், விவசாய நிலங்கள் அருகே உள்ள தனியார் மில் மற்றும் தொழிற்சாலைகள் ஏராளமான ஆழ்துளை கிணறுகளை அமைத்து தண்ணீரை எடுத்து வருகின்றன. இதனால் அவற்றின் அருகே உள்ள விவசாய கிணறுகள் வறண்டு வருகின்றன. எனவே ஆழ்துளை கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்க கூடாது.

கன்னிவாடி அருகே உள்ள சிரங்காடு கிராமத்தில் நீர்த்தேக்க குட்டைகள் அமைக்க வேண்டும். சின்னாறு கால்வாய் மற்றும் இரண்டெல்லைப்பாறையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் மற்றும் மாங்கரை ஆற்றுப்பகுதியில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு பயன்படுத்த வேண்டும். மேலும் விவசாய பணிகளிலும் ஈடுபடுத்த வேண்டும்.

நிபந்தனையின்றி கடன்

தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றாவிடில், அதனை அகற்றிவிட்டு அதற்கான செலவுத்தொகை உரிமையாளர்களிடம் 2 மடங்காக வசூலிக்கப்படும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் இந்த உத்தரவால் கவலையில் உள்ளனர். சிறுமலை அடிவாரத்தில் உள்ள கன்னிமார் கோவில் அருகே புதிய தடுப்பணை அமைக்க வேண்டும்.

மேலும் அந்தபகுதிகளில் காட்டெருமைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது இடுபொருட்கள் வாங்கிய செலவுக்கு கூட போதுமானதாக இல்லை. எனவே ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை

விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளித்து பேசும்போது, பேரிடர் மேலாண்மை திட்ட விதிகளின்படி ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு மட்டுமே வறட்சி நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. நீர்வரத்து கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுத்தும்படி அரசுக்கு தெரிவிக்கப்படும். உணவு, குடிநீர் தட்டுப்பாட்டால் விவசாய நிலங்களுக்குள் காட்டெருமைகள் புகுந்து வருகின்றன. இதனை தடுக்க வனப்பகுதிகளில் தொட்டிகள் அமைத்து நீர்த்தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


Next Story