வறட்சியால் வறண்டு வரும் ஏரி, குளங்களால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து வருகிறது
வறட்சியின் காரணமாக மாவட்டத்தில் ஏரி மற்றும் குளங்கள் வறண்டு வருகிறது.
கடலூர்,
கடலூர் மாவட்டம் விவசாயத்துக்கு பெயர் போன மாவட்டம் ஆகும். ஆண்டுக்கு 2½ லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தையே சார்ந்து இருக்கிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை காவிரி தண்ணீரையும், பருவமழையையும் நம்பியே பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பருவமழை பெய்யவில்லை. காவிரி தண்ணீரும் கிடைக்கவில்லை. கடும் வறட்சியின் காரணமாக சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் கருகிப்போனது. வாடிய பயிர்களை கண்டு மனம் கலங்கிய விவசாயிகள் சிலர் தற்கொலை செய்த சம்பவமும் நடந்துள்ளது. அரசு அறிவித்த நிவாரணமோ யானைப்பசிக்கு சோளப்பொறி போன்று இருப்பதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரை இந்த ஆண்டு விவசாயம் பொய்த்துப்போனது.
ஏரி, குளங்கள்இது ஒரு புறம் இருக்க மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களும் தண்ணீரின்றி வறண்டு வருகின்றன. மாவட்டத்தில் பொதுப்பணித்துறை(நீர்வளம்) கட்டுப்பாட்டில் உள்ள பிரதான ஏரிகளான வீராணம் ஏரியின் அதிகபட்ச நீர் மட்டம் 47.5 அடியாக இருந்தபோதிலும் தற்போது ஏரியில் 38.75 அடி தண்ணீரே உள்ளது.
அதேபோல் வெலிங்டன் ஏரி– 7 அடி(அதிகபட்ச நீர்மட்டம் 27.9 அடி), வாலாஜா ஏரி– 5.5அடி(அதிபட்ச நீர் மட்டம் 5.5 அடி), பெருமாள் ஏரி– 3.4 அடி(அதிகபட்ச நீர் மட்டம் 6.5 அடி) தண்ணீர் இருப்பில் உள்ளது. சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தண்ணீர் இல்லை. இது தவிர சிதம்பரம் கோட்டத்தில் 18 சிறிய ஏரிகளும், விருத்தாசலம் கோட்டத்தில் 210 சிறிய ஏரிகளும் உள்ளன. இந்த ஏரிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே தண்ணீர் உள்ளது. அதேபோல் ஊராட்சி பகுதிகளில் உள்ள 482 குளம், குட்டைகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாக தண்ணீர் இருப்பில் உள்ளது.
குடிநீர் பிரச்சினைதற்போது பகல் பொழுதில் சுட்டெரித்து வரும் வெயிலின் காரணமாக ஏரி, குளம், குட்டைகளில் உள்ள குறைந்த அளவு இருப்பில் உள்ள தண்ணீரும் நாளுக்கு நாள் வற்றி வருகிறது. சில ஏரி, குளம், குட்டைகள் வறண்டு வருவதையும் பார்க்க முடிகிறது. இதனால் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சினை ஏற்படும் அபாய நிலை உள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
94 திறந்த வெளி கிணறுகள்மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை அறிந்து கொள்வதற்காக மாவட்டத்தில் 94 திறந்த வெளி கிணறுகள், 47 ஆழ்துளை கிணறுகள் அமைத்துள்ளோம். இதன் மூலம் மாதத்துக்கு ஒருமுறை நிலத்தடி நீர் மட்டத்தை அளவீடு செய்து வருகிறோம். நிலத்தடி நீர் மட்டத்தை பொறுத்தவரை இடத்து இடம் மாறுபடும். மாவட்டம் முழுவதும் பூமிக்கு அடியில் ஒரே அளவில் நீர் மட்டம் இருப்பது இல்லை. நிலம் மற்றும் நீர் வளத்தை பொறுத்து இடத்துக்கு இடம் நிலத்தடி நீர் மட்டம் மாறுபடும்.
அடுத்து நிலத்தடி நீர் மட்டம் பூமியின் தரைப்பகுதியில் இருந்துதான் நீர் மட்டம் கணக்கிடப்படும். அதன்படி கடந்த 2015–ம் ஆண்டு ஆண்டு பெய்த பலத்த மழையின் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் டிசம்பர் மாதம் தரை மட்டத்தில் 2.94 மீட்டராக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு(2016) பருவமழை பொய்த்துப் போனதால் டிசம்பர் மாதம் நிலத்தடி நீர் மட்டம் தரையில் இருந்து 6.39 மீட்டராக கீழே சென்று விட்டது.
குடிநீர் பிரச்சினைஇந்த ஆண்டு(2017) கடந்த ஜனவரி மாதம் நிலத்தடி நீர் மட்டம் 6.77 மீட்டர் ஆழமாக இருந்தது. ஆனால் இந்த மாதம் 6.27 மீட்டர் ஆழமாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 106.5 மில்லி மீட்டர் மழை பெய்ததால் கடந்த மாதத்தை விட இந்த மாதம் நீர் மட்டம் 0.50 மீட்டராக உயர்ந்து இருக்கிறது. மாவட்டத்தில் தற்போதுள்ள நீர் ஆதாரங்களை வைத்து பார்த்தால் வருகிற ஏப்ரல் மாதம் வரைக்கும் குடிநீர் பிரச்சினை இருக்காது. மே, ஜூன் மாதங்களில் மழை பெய்யவில்லை என்றால் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.