தனியார் கல்லூரி மாணவர்களிடம் கல்விக்கட்டணத்தை பல்கலைக்கழகம் நேரடியாக வசூலிக்கும் அறிவிப்பு ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


தனியார் கல்லூரி மாணவர்களிடம் கல்விக்கட்டணத்தை பல்கலைக்கழகம் நேரடியாக வசூலிக்கும் அறிவிப்பு ரத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Feb 2017 4:15 AM IST (Updated: 27 Feb 2017 10:24 PM IST)
t-max-icont-min-icon

தனியார் கல்லூரி மாணவர்களிடம் கல்விக்கட்டணத்தை பல்கலைக்கழகம் நேரடியாக வசூலிக்கும் அறிவிப்பை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

கல்விக்கட்டணம்

தேனி மாவட்டம் குள்ளப்புரத்தை சேர்ந்தவர் கே.பலராமன். ஸ்ரீகிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலரான இவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

குள்ளப்புரத்தில் வேளாண் தொழில்நுட்ப கல்லூரியை நடத்தி வருகிறோம். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கி வரும் இந்த கல்லூரியின் மாணவர் சேர்க்கையில் 50 சதவீதத்தை பல்கலைக்கழகம் மூலமாகவும், மீதமுள்ள இடங்களை கல்லூரி நிர்வாகம் சார்பிலும் நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது நிர்வாக தரப்பில் சேர்க்கப்படும் முதலாம் ஆண்டு மாணவர்களிடன் கல்விக்கட்டணத்தை பல்கலைக்கழகத்துக்கு நேரடியாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் நேரடியாக கல்விக்கட்டணம் பெற பல்கலைக்கழகத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே அந்த உத்தரவை ரத்து செய்து, முதலாம் ஆண்டு மாணவர்களிடம் இருந்து நாங்களே கட்டணம் பெற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார்.

இதனையடுத்து ஆஜரான மனுதாரர் வக்கீல், “தனியார் கல்லூரிகளின் கல்விக்கட்டணத்தை பல்கலைக்கழகம் வரைமுறைப்படுத்தலாம். அந்த கல்லூரிகள் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் மாணவர்களிடம் நேரடியாக பல்கலைக்கழகம் கல்விக்கட்டணத்தை வசூலிக்க முடியாது“ என்றார்.

அறிவிப்பு ரத்து

விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு–

தனியார் கல்லூரி மாணவர்களிடம் இருந்து பல்கலைக்கழகமோ, அரசோ கல்விக்கட்டணத்தை நேரடியாக பெற அதிகாரம் கிடையாது. தேர்வுக்கட்டணம் போன்ற சில குறிப்பிட்ட கட்டணங்களை வேண்டுமானால் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் கல்விக்கட்டணத்தை மாணவர்களிடம் நேரடியாக வசூலித்தால் கல்லூரி நிர்வாகத்தில் தலையிடுவதாக அமையும். எனவே இதுதொடர்பான பல்கலைக்கழக அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Next Story