வேலூரில் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் வங்கிகள் வெறிசோடி காணப்பட்டன


வேலூரில் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் வங்கிகள் வெறிசோடி காணப்பட்டன
x
தினத்தந்தி 1 March 2017 4:45 AM IST (Updated: 28 Feb 2017 7:05 PM IST)
t-max-icont-min-icon

தனியார் மயமாக்குவதை எதிர்த்து வேலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தப்போராட்டத்தால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வெறிசோடி காணப்பட்டது.

வேலூர்,

வேலை நிறுத்த போராட்டம்

நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது. செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு விதிக்கப்பட்ட நாட்களில் கூடுதல் நேரம் பணிபுரிந்த வங்கி ஊழியர்களுக்கு கூடுதலாக சம்பளம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மத்திய அரசு ஊழியர்கள் போன்று வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வு நிதி உதவி ரூ.20 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் தேசிய மயமாக்கப்பட்ட தலைமை வங்கிகள் மற்றும் கிளை வங்கிகள் என சுமார் 250–க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 1500–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் வேலூர் அண்ணாசாலையில் உள்ள ஸ்டேட் வங்கி மண்டல தலைமை அலுவலகம் முன்பு கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100–க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர்கள் சம்பத்குமார் தலைமை தாங்கினார். இதில் இந்தியன் வங்கியின் ஊழியர் சங்க உதவி தலைவர் ராமநாதன், உதவி செயலாளர் காசிநாதன் உள்பட பல்வேறு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி மில்டன் கூறுகையில், ‘‘வேலூர் மாவட்டத்தில் கோரிக்கைகள் வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இந்த ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தினால் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் கோடிக்கணக்கான ரூபாய் பண பரிவர்த்தனை பாதிக்கப்படும்’ என்றார்.

இதனால் வேலூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பெரும்பாலான வங்கிகள் வெறிசோடி காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் பணபரிவர்த்தனை செய்ய முடியாமல் அவதிக்கு உள்ளாயினர்.


Next Story