தவறான தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை: ரேஷன் கார்டு குளறுபடி குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்
சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன் கார்டு குளறுபடி குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்
மானாமதுரை,
ரேஷன் கார்டு குளறுபடிசிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 3 லட்சத்து 86 ஆயிரத்து 593 ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 3 லட்சத்து 70 ஆயிரம் கார்டுகள் அனைத்து பொருட்களும் வாங்கக்கூடியவையாகவும், எஞ்சியுள்ள கார்டுகள் போலீசார் மற்றும் பிற வகையிலான கார்டுகள் ஆகும். இந்நிலையில் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிக்காக ரேஷன் கார்டு கணக்கெடுப்பு பணி நடந்தது. வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமையுடைய ரேஷன் கார்டுகள் என தரம் பிரிக்கப்பட்டது.
இதில் முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகளுக்கு அரிசி, சீனி உள்ளிட்டவைகள் வழங்கப்பட மாட்டாது, முன்னுரிமை உள்ள கார்டுகளுக்கு அரசின் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ரேஷன் கார்டுகள் கணக்கெடுப்பு முடிந்தவுடன் அந்தந்த ஊராட்களில் கடந்த கடந்த 24–ந்தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு முன்னுரிமை உள்ள கார்டுகள், முன்னுரிமை அற்ற கார்டுகள் குறித்த பெயர்கள் வாசிக்கப்பட்டன. ஆட்சேபம் உள்ளவர்கள் இதற்கென உள்ள படிவத்தை பூர்த்தி செய்து ரேஷன் கடைகளில் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதனையொட்டி பலரும் ரேஷன் கார்டுகளில் மாற்றம் கோரி மனு செய்தனர்.
பீதியடைய வேண்டாம்சமீப காலமாக கிராமப்புற மக்களிடையே முன்னுரிமை அற்ற கார்டுகள் ரத்து செய்யப்பட உள்ளதாக பீதி கிளம்பியதையடுத்து கிராமப்புற மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டு குளறுபடிக்கான காரணம் குறித்து வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறியதாவது:– ரேஷன் குளறுபடி என்று கூறி கடந்த 10 நாட்களாக மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனால் கிராமத்தினர் கலெக்டர் அலுவலகத்தை தொடர்ந்து முற்றுகையிட்டு வருகின்றனர். இதற்கு தகுந்த நடவடிக்கையாக தான் கடந்த 24–ந்தேதி சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு குளறுபடி, கார்டு ரத்து செய்யப்படும் என்று தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே ரேஷன் கார்டு குளறுபடி குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.