வேலை கிடைக்காத விரக்தியில் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
ராசிபுரத்தில், வேலை கிடைக்காத விரக்தியில் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராசிபுரம்,
முதுகலை பட்டதாரி பெண்ராசிபுரம் டவுன் வி.நகர் மண்ணார் காடு பகுதியைச் சேர்ந்தவர் காசிலிங்கம். இறந்து விட்டார். இவருடைய 2–வது மகள் துர்காதேவி என்கிற துர்காம்பிகை (வயது 36). முதுகலை பட்டதாரியான (எம்.ஏ., எம்.எட்.) இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் ஏற்கனவே 3 முறை ஆசிரியர் வாரிய தேர்வு எழுதி தேர்ச்சி பெறாததாலும், வேலை கிடைக்காததாலும் மனம் உடைந்து விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது நடைபெறவுள்ள ஆசிரியர் தேர்விலாவது நன்றாக படித்து தேர்ச்சி பெறும்படி அவரது தாயார் மகாராணி கூறியுள்ளார். அப்போது என்னால் முடிந்ததைதான் செய்ய முடியும் என்று கூறி துர்காம்பிகை கோபத்துடன் வீட்டின் மாடியில் இருந்த அறைக்கு சென்றுள்ளார். அரை மணி நேரம் கழித்தும் துர்காம்பிகை திரும்பி வராததால் அவரது தாயார் மாடிக்கு சென்று அறையை திறந்துள்ளார். அப்போது கதவு திறக்கப்படவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலைஉடனடியாக அவரும் அவரது உறவினர்களும் கதவு உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது துர்காம்பிகை மின்விசிறியில் சுடிதார் துப்பாட்டாவால் தூக்குப்போட்ட நிலையில் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை இறக்கி 108 ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே துர்காம்பிகை இறந்துவிட்டது தெரியவந்தது.
இதுபற்றி மகாராணி ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, சப்–இன்ஸ்பெக்டர் ஜெகன்மோகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட துர்காம்பிகையின் உடல் பிரேத பரிசோதனை ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்தது.