போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை சீரமைக்காததை கண்டித்து கலெக்டர், எம்.எல்.ஏ.வின் காரை வழிமறித்து கிராம மக்கள் திடீர் போராட்டம் விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையை சீரமைக்காததை கண்டித்து கலெக்டர், எம்.எல்.ஏ.வின் காரை வழிமறித்து கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
மனுநீதி நாள் முகாம்விருத்தாசலம் அருகே சிறுவம்பார் கிராமத்தில் நேற்று மனு நீதி நாள் முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ராஜேஷ், கலைச்செல்வன் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் கிருபானந்தம், தாசில்தார் பன்னீர்செல்வம் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின்னர் அங்கிருந்து கலெக்டர் ராஜேஷ், கலைச்செல்வன் எம்.எல்.ஏ. உள்பட அதிகாரிகள் அனைவரும் தங்களது கார்களில் புறப்பட்டனர்.
திடீர் போராட்டம்இந்த நிலையில் அந்த கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. உள்பட அதிகாரிகள் வந்த காரை வழிமறித்து, அவர்களை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீசார் கிராம மக்களை கலைந்து போகுமாறு தெரிவித்தனர்.
ஆனால் அவர்கள், தங்களது கிராமத்தில் இருந்து மங்கலம்பேட்டைக்கு செல்லும் வகையில் 6 கி.மீ. சாலை அமைந்துள்ளது. இந்த சாலை போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும், குழியுமாக இருக்கிறது. இதை சீரமைக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த சாலையின் மூலமாக நாங்கள் தினசரி சந்தித்து வரும் இன்னல்களை கலெக்டரும் தெரிந்து கொள்ளும் வகையில் அந்த சாலையின் வழியாக தான் கலெக்டர், எம்.எல்.ஏ. உள்பட அனைவரும் செல்ல வேண்டும். அப்போது தான் நாங்கள் கலெக்டரின் காருக்கு வழிவிடுவோம் என்று கூறினர்.
தள்ளுமுள்ளுஅப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு உருவானது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இருப்பினும் போலீசார் கிராம மக்களை வலுக்கட்டாயமாக, சாலையை விட்டு அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து கலெக்டர், எம்.எல்.ஏ. உள்பட அனைத்து அதிகாரிகளும் அங்கிருந்து, பாலி கிராமத்தின் வழியாக தங்களது கார்களில் சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.