வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் மாவட்டத்தில் ரூ.100 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.100 கோடி அளவில் பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசு சீர்திருத்த
கடலூர்,
வேலை நிறுத்தம்வாராக் கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசு சீர்திருத்தங்களை கைவிட வேண்டும், பண மதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மத்திய அரசின் மக்கள் விரோத ஊழியர் கொள்கைகள், போராடி வென்ற தொழிற்சங்க உரிமைகளை பறிக்கின்ற போக்கு ஆகியவற்றை கண்டித்தும், பணி ஓய்வு கொடைத்தொகை மற்றும் விடுப்புத்தொகையின் மீதான வருமான வரியை ரத்து செய்ய வேண்டும், 11–வது ஊதிய மாற்று ஒப்பந்தத்தை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது.
அதன்படி நேற்று நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்திலும் அரசு மற்றும் சில தனியார் வங்கிகள் என 160 வங்கி கிளைகளில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் வங்கிகள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சில வங்கிகளில் கிளை மேலாளர், உதவி கிளை மேலாளர்கள் மட்டும் இருந்தனர்.
ஏ.டிஎம். மையங்களில் திரண்டனர்ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தினால் சில வங்கிகள் மூடியே கிடந்தன. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட பின்னரும் சிலர் வங்கிக்கு பணம் எடுப்பதற்கும், போடவும் வந்திருந்தனர்.
போராட்டம் பற்றி அறிந்ததும், பணம் எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றனர். ஏ.டி.எம். மையங்களில் ஒரே நேரத்தில் பலர் வந்து குவிந்ததால், சில ஏ.டி.எம். மையங்களில் உடனடியாக பணம் காலியாகிவிட்டது. இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாத சம்பளம் பெறும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களும் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் எடுக்க வந்தனர். ஆனால் சிலரது வங்கி கணக்கில் சம்பள பணம் போடப்படாததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் சிலர் வங்கியுடன் அமைக்கப்பட்டுள்ள மின்னணு பணபரிவர்த்தனை மையத்துக்கு சென்று தேர்வு, வரி போன்ற கட்டணங்களை செலுத்தினர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்று பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானார்கள்.
ஆர்ப்பாட்டம்கடலூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் சங்கத்தை சேர்ந்த திருமலை முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீதரன், கடலூர் தாலுகா பொதுச் செயலாளர் மீரா, ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் கூட்டமைப்பு மருதவாணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். இதில் வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திரளாக கலந்துகொண்டனர். முடிவில் யூகோ தாலுகா செயலாளர் கோபு நன்றி கூறினார்.
பணபரிவர்த்தனை பாதிப்புபோராட்டம் குறித்து வங்கி ஊழியர் சங்க மாவட்ட உதவி தலைவர் ரமணி கூறும்போது கடலூர் மாவட்டத்தில் இன்று(நேற்று) நடைபெறும் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு மற்றும் சில தனியார் வங்கிகள் என மொத்தம் 160 வங்கி கிளைகளில் பணிபுரிந்து வரும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். இதனால் வங்கி சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காசோலை பணபரிவர்த்தனை, வரைவோலை எடுக்க முடியாது. அதேபோல் ஓய்வூதியர்கள், மாதசம்பளம் பெறுபவர்களும் பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.100 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.