நெல்லிக்குப்பம் அருகே துணிகர சம்பவம் ரூ.4 லட்சம் நகை, பணம் கொள்ளை கை, கால்களை கட்டி பெண்ணை தோட்டத்துக்கு தூக்கி சென்று பலாத்காரம்


நெல்லிக்குப்பம் அருகே துணிகர சம்பவம் ரூ.4 லட்சம் நகை, பணம் கொள்ளை கை, கால்களை கட்டி பெண்ணை தோட்டத்துக்கு தூக்கி சென்று பலாத்காரம்
x
தினத்தந்தி 1 March 2017 4:45 AM IST (Updated: 28 Feb 2017 10:16 PM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் அருகே 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் வீடு புகுந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

நெல்லிக்குப்பம்,

முகமூடி கொள்ளையர்கள்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள சித்தரசூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி சந்தானலட்சுமி (வயது 40). இவர்களுக்கு உதயகுமார்(20), தினேஷ்குமார்(18) என்று 2 மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரன் இறந்து விட்டார். தற்போது சந்தானலட்சுமி கூலி வேலைக்கு சென்று வருகிறார். மேலும் இவர்களது இரு மகன்களும் சமையல் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று முன்தினம் உதயகுமார், தினேஷ்குமார் ஆகியோர் வழக்கம் போல் சமையல் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சந்தானலட்சுமி மட்டும் தனியாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு இவரது வீட்டின் கதவை மர்ம மனிதர்கள் சிலர் தட்டினர். சத்தம் அதிகமாக கேட்டதால், சந்தேகமடைந்த சந்தானலட்சுமி பயத்தில் கதவை திறக்காமல் இருந்தார். இருப்பினும் விடாமல் தட்டிய மர்ம மனிதர்கள், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். அதில் முகமூடி அணிந்து கொண்டு 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஒருவர் பின்பின் ஒருவராக வீட்டுக்குள் திபுதிபுவென புகுந்தனர்.

பலாத்காரம்

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சந்தானலட்சுமி சத்தமிட்டார். அப்போது சத்தம் போட்டால் குத்தி கொலை செய்துவிடுவதாக கத்தியை காட்டி அவரை கொள்ளையர்கள் மிரட்டி உள்ளனர். இருப்பினும் அவர் கூச்சலிட்டதால், அங்கிருந்த கட்டையால் சந்தானலட்சுமியை அவர்கள் தாக்கினர். மேலும் அவரது சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக வாயில் துணியை வைத்து கை, கால்களை கட்டினார்கள்.

பின்னர் சந்தானலட்சுமியை வீட்டின் அருகே உள்ள தோட்டத்துக்கு தூக்கி சென்றனர். அங்கு கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேரும் சந்தானலட்சுமியை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. பின்னர் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு, அவரை தோட்டத்து பகுதியிலேயே போட்டுவிட்டு வந்தனர். கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி வைக்கப்பட்டு இருந்ததால் சந்தானலட்சுமியால் அங்கிருந்து மீண்டு வர முடியாமல், அவர் அங்கேயே கிடந்தார்.

விவசாயி வீட்டில் கொள்ளை

இதையடுத்து கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் சந்தானலட்சுமியின் வீட்டிற்குள் வந்து அங்கிருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை திருடினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள ராஜா, பெருமாள் ஆகியோரது வீடுகளின் கதவுகளை தட்டினர். ஆனால் அவர்கள் திறக்கவில்லை.

பின்னர் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து கொண்டு, உள்ளே புகுந்தனர். தொடர்ந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதனிடையே சத்தம் கேட்டு ஆறுமுகம் குடும்பத்தினர் தூக்கத்தில் இருந்து எழுந்து மின்விளக்கை போட்டனர். அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து வெளியே ஓடிவிட்டனர்.

தப்பி ஓட்டம்

இந்த சூழ்நிலையில் கிராமத்திற்குள் முகமூடி கொள்ளையர்கள் புகுந்து அட்டூழியம் செய்து வரும் தகவல் அந்த பகுதி மக்களிடையே பரவியது. இதனால் கொள்ளையர்களை பிடிக்கும் வகையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். இதை சுதாரித்துக்கொண்ட முகமூடி கொள்ளையர்கள் கிராமத்தில் உள்ள வாய்க்கால் வழியாக தப்பி ஓடினர். இதை பார்த்த கிராம மக்களும் அவர்களை துரத்திச் சென்றனர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்கள்.

மருத்துவமனையில் அனுமதி

இதற்கிடையே கொள்ளையர்களை துரத்திச் சென்ற போது, தோட்டத்து பகுதியில் சந்தானலட்சுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்ததை கிராம மக்கள் பார்த்தனர். இதையடுத்து அவரை அங்கிருந்து மீட்டனர். மேலும் கொள்ளையர்கள் தாக்கியதில் சந்தானலட்சுமி காயமடைந்ததுடன், அவரது இடுப்பு எலும்பிலும் முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொள்ளையர்களால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதால், அவருக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்தனர்

இந்த கொள்ளை சம்பவம் பற்றி நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கங்காதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் நேரில் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் நடந்த சம்பவம் குறித்து கிராம மக்களிடம் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் விசாரணை நடத்தினார்.

இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை நடந்த வீடுகளில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன்வரவழைக்கப்பட்டது. இது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து வாய்க்கால் கரை வழியாக 3 கி.மீ. தூரம் வரை ஓடி அகரம் கிராமத்தில் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

ரூ.4 லட்சம் கொள்ளை

இந்த சம்பவத்தில் கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். முகமூடி கொள்ளை கும்பலின் இந்த அட்டூழியம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story