ஓமலூரில் பரபரப்பு: கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய போலீஸ்காரர் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை


ஓமலூரில் பரபரப்பு: கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய போலீஸ்காரர் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 1 March 2017 4:00 AM IST (Updated: 28 Feb 2017 10:51 PM IST)
t-max-icont-min-icon

ஓமலூரில் கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகை

ஓமலூர்,

கிராம நிர்வாக அலுவலர்

சேலம் மாவட்டம் மேச்சேரி கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகன் சவுரிராஜன் (வயது 24). இவர் ஓமலூர் அருகே உள்ள டேனிஸ்பேட்டை கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். நேற்று இவர் டேனிஸ்பேட்டையில் இருந்து மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

ஓமலூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே சென்றபோது பின்னால் மேட்டூரை நோக்கி ஒரு போலீஸ் வாகனம் வந்தது. திடீரென அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர், முந்திச்சென்று மோட்டார் சைக்கிளின் குறுக்கே நிறுத்தினார். பின்னர் அந்த வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய ஒரு போலீஸ்காரர், ஒலி எழுப்பியும் ஓரமாக செல்லமாட்டாயா? என கேட்டு சவுரிராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது.

போலீஸ் நிலையம் முற்றுகை

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சவுரிராஜன் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும், இதுபற்றி அறிந்ததும் ஓமலூர் பகுதியில் இருந்த கிராம நிர்வாக அலுவலர்கள் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஓமலூர் தாசில்தார் ராஜேந்திரன் போலீஸ் நிலையத்துக்கு வந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சவுரிராஜனை தாக்கிய போலீஸ்காரர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், சவுரிராஜனை தாக்கியவர் சேலம் காமநாயக்கன்பட்டியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பதும், கோவையில் போலீஸ்காரராக பணியாற்றும் அவர் மேட்டூரில் கமாண்டோ பயிற்சிக்கு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினரும் சமரசம் அடைந்ததால் கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story