ஓமலூர் ரெயில்வே பாலத்தில் விபத்து: மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் பரிதாப சாவு வாலிபர் படுகாயம்
ஓமலூர் ரெயில்வே பாலத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓமலூர்,
தனியார் நிறுவன ஊழியர்கள்சேலம் மாவட்டம் மல்லூர் ஏர்வாடி எருமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் அர்ச்சுனன் (வயது 18). இதே பகுதியை சேர்ந்தவர் பழனிசாமியின் மகன் ரமேஷ் (20). இவர்கள் 2 பேரும் ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தாரமங்கலத்தில் உள்ள தங்கள் நிறுவன வாடிக்கையாளருக்கு பொருட்களை சப்ளை செய்வதற்காக அர்ச்சுனனும், ரமேசும் ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். ஓமலூர் ரெயில்வே மேம்பாலத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
வேன் மோதியதுஅப்போது மேச்சேரியில் இருந்து ஓமலூர் நோக்கி வந்த ஒரு வேன் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் அர்ச்சுனன், ரமேஷ் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்கள்.
அங்கிருந்த பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அர்ச்சுனனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.