கருப்புக்கொடி ஏந்தி கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தங்கு தடையின்றி பாவுநூல் கிடைக்கவும், தடையின்றி கூலி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி
கைத்தறி நெசவாளர்களுக்கு தங்கு தடையின்றி பாவுநூல் கிடைக்கவும், தடையின்றி கூலி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும், குறைந்தபட்ச கூலியை அமல்படுத்த வேண்டும், பதிவாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மழைக்கால நிவாரணம் ரூ.3 ஆயிரம் வழங்குவதை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை மாவட்ட கைத்தறி தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் குணசேகர், முருகன், மனோகரன், சங்கர், முத்து, வீரப்பன், நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது சங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டுறவு பதிவாளர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.