ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ்–லாரி நேருக்கு நேர் மோதல்; டிரைவர் பலி
ஒட்டன்சத்திரம் அருகே அரசு பஸ்– லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில், லாரி டிரைவர் பலியானார். மேலும் 32 பேர் படுகாயம் அடைந்தனர்.
திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த மணி என்பவருடைய மகன் தங்கபாண்டி (வயது 45). லாரி டிரைவர். இவர் நேற்று ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரத்தில் இருந்து லாரியை ஓட்டிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தார். இதே போல மதுரையில் இருந்து திருப்பூர் நோக்கி ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இதனை தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்த டிரைவர் சுரேஷ்கண்ணன் (40) என்பவர் ஓட்டினார்.
ஒட்டன்சத்திரம்– திண்டுக்கல் சாலையில், செம்மடைப்படி அருகே சென்றபோது பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. லாரி மீது மோதிய பஸ், சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தில் மோதி நின்றது. இதில், அரசு பஸ் மற்றும் லாரியின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் தங்கபாண்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
32 பேர் படுகாயம்மேலும் பஸ்சில் இருந்த பயணிகள் படுகாயங்களுடன் அலறி கூச்சல் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அந்த வழியாக வந்தவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி அங்கு வந்த தீயணைப்பு படையினர் படுகாயம் அடைந்த பஸ் டிரைவர் சுரேஷ்கண்ணன், கண்டக்டர் அங்குசாமி (56) உள்பட 32 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களில் கம்பிளியம்பட்டியை சேர்ந்த முகேஷ்குமார் (20), திருப்பூர் மாவட்டம் அருவம்பாளையத்தை சேர்ந்த அன்னபூரணி (45), திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்வராஜ் (45) உள்பட 25 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதேபோல சிலுவத்தூரை சேர்ந்த தனலட்சுமி (27), காளியம்மாள் (40) உள்பட 7 பேர் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.