தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை கரடி கடித்து குதறியது


தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை கரடி கடித்து குதறியது
x
தினத்தந்தி 1 March 2017 4:30 AM IST (Updated: 1 March 2017 4:59 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே தோட்டத்தில் காவலுக்கு இருந்த விவசாயியை கரடி கடித்து குதறியதில் படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தூங்கி கொண்டிருந்தார்

அந்தியூர் அடுத்த பர்கூர் அருகே உள்ள ஈரெட்டியை சேர்ந்தவர் அப்பையன் (வயது 45). விவசாயி. இவருக்கு சொந்தமான 4 ஏக்கர் தோட்டம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த தோட்டத்தில் அவர் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு உள்ளார். மரவள்ளிக்கிழங்கை வனவிலங்குகள் நாசப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இரவு நேரத்தில் அப்பையன் தனது தோட்டத்தில் காவலுக்கு இருப்பது வழக்கம்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்துக்கு அவர் காவலுக்கு சென்றார். தோட்டத்தை சுற்றும் பார்த்துவிட்டு அங்குள்ள பரணுக்கு தூங்க சென்றார். நள்ளிரவு 12 மணி அளவில் அவர் பரணில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அவருடைய கால் மட்டும் பரணில் இருந்து கீழே தொங்கி கொண்டிருந்தது.

கடித்து குதறியது

அப்போது அங்கு கரடி ஒன்று வந்தது. தூங்கி கொண்டிருந்த அப்பையனுக்கு கரடி வந்தது தெரியவில்லை. பரணில் இருந்து தொங்கி கொண்டிருந்த அவருடைய காலை கண்ட கரடி அதை கடித்து குதறியது. மேலும் பரணில் இருந்து அவரை இழுத்தது.

திடீரென தன்னுடைய காலை கரடி கடித்ததை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த அவர் ‘கரடி, கரடி’ என சத்தம் போட்டு கத்தினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டதும் அருகில் உள்ள தோட்டங்களில் காவலுக்கு இருந்தவர்கள் அப்பையன் தோட்டத்துக்கு தீப்பந்தங்களுடன் விரைந்து ஓடி வந்தனர். இதை கண்டதும் கரடி அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் ஓடியது. உடனே அப்பையனை அங்கிருந்தவர்கள் மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுபற்றி அறிந்ததும் பர்கூர் வனச்சரகர் பாலகிருஷ்ணன், அந்தியூர் ஆஸ்பத்திரிக்கு சென்று அப்பையனை பார்த்து ஆறுதல் கூறினார்.


Next Story