பொள்ளாச்சியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; வர்த்தகம் பாதிப்பு


பொள்ளாச்சியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 1 March 2017 4:30 AM IST (Updated: 1 March 2017 4:59 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; கண்டன ஆர்ப்பாட்டம் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டதால் பொள்ளாச்சி தாலுகாவில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

வேலை நிறுத்தம்

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளும் நேற்று திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் பொள்ளாச்சி தாலுகா வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் நியூஸ்கீம் ரோட்டில் உள்ள ஒரு வங்கி முன் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க உறுப்பினர் சண்முகம் தலைமை தாங்கினார்.இதில் வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் ஜெயபிரகாஷ் பேசியதாவது:–

வராக்கடன்களை வசூலிக்க வேண்டும்

மத்திய அரசு வராக்கடன்களை உடனடியாக வசூலிக்க வேண்டும். கடனை அடைக்காமல் ஏமாற்றுபவர்களை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும். வங்கியில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்பவும், செல்லாத நோட்டு அறிவிப்பின் போது பணிபுரிந்த ஊழியர்கள், அலுவலர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கவும் முன் வர வேண்டும். வங்கிகளின் செலவினங்களை அரசே ஏற்கவும், ஓய்வூதிய திட்டத்தை சீரமைக்கவும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.

வங்கிகள் சீரமைப்பு மசோதாவையும், தொழிற்சங்க சட்டசீர்திருத்த மசோதாவை எதிர்ப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

முடிவில் சங்க உறுப்பினர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

பொதுமக்கள் அவதி

பொள்ளாச்சியில் நேற்று அனைத்து வங்கிகளும் பூட்டி கிடந்தன. இதனால் வங்கிகளுக்கு காசோலை பரிமாற்றம், டெபாசிட் போடுவதற்கும், பணம் எடுப்பதற்கும் வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வங்கிகள் பூட்டப்பட்டதால் பொள்ளாச்சியில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் ஏ.டி.எம். எந்திரங்களில் வைக்கப்பட்டு இருந்த பணம் காலியானது. பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதிபட்டனர்.

ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு

இது குறித்து வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:–

வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் காசோலை பரிவர்த்தனை, பணப்பட்டுவாடா உள்பட பல்வேறு பரிமாற்றங்கள் பாதிக்கப்பட்டன.

பொள்ளாச்சி தாலுகாவில் 28 வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளில் பணிபுரியும் 420 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பொள்ளாச்சி தாலுகாவில் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story