கோவை காந்திபுரத்தில் மேம்பாலத்தை மேலும் நீட்டிக்க திட்டம்


கோவை காந்திபுரத்தில் மேம்பாலத்தை மேலும் நீட்டிக்க திட்டம்
x
தினத்தந்தி 1 March 2017 4:00 AM IST (Updated: 1 March 2017 4:59 AM IST)
t-max-icont-min-icon

கோவை காந்திபுரத்தில் ரூ.17 கோடி செலவில் மேம்பாலத்தை மேலும் 440 மீட்டர் நீளம் நீட்டிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

ரூ.164 கோடி செலவில் மேம்பாலம்

கோவை காந்திபுரத்தில் இரண்டு அடுக்கு மேம்பால பணிகள் ரூ.164 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட மேம்பாலம் 1,752 மீட்டர் நீளத்துக்கு பார்க்கேட் நஞ்சப்பா ரோட்டில் இருந்து ஆம்னி பஸ் நிலையம் வரை 54 தூண்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தில் 100 அடி ரோடு ஜி.பி.சிக்னல் பகுதியில் 52 மீட்டர் நீளத்துக்கு இணைப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட தலைமை என்ஜினீயர் கண்ணன் நேற்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது–

ஏப்ரல் மாதம் போக்குவரத்து

மேம்பால இணைப்பு பணிகள் பெட்டி வடிவ (‘பாக்ஸ் கேடர்‘) முறையில் நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் பலம் வாய்ந்ததாக அமைக்கப்படுகிறது. கான்கிரீட் இணைப்பு பணிகள் இந்த மாதம் இறுதி வரை நடைபெறும். ஏப்ரல் மாத இறுதியில் முதல்கட்ட பாலத்தில் போக்குவரத்து தொடங்கும்.

2–வது கட்ட மேம்பாலம் 100 அடி ரோடு கல்யாண் நிறுவன பகுதியில் இருந்து சின்னசாமி சாலை வரை 1,226 மீட்டர் நீளத்துக்கு 38 தூண்களுடன் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது.

ரூ.17 கோடி செலவில் நீட்டிப்பு

பெருகி வரும் போக்குவரத்துக்கு தகுந்தவாறு 2–வது கட்ட மேம்பாலத்தை நீட்டிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி ராமகிருஷ்ணா மருத்துவமனை சிக்னலில் இருந்து மேலும் 440 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் நீட்டிக்கப்படும். இதற்கு ரூ.17 கோடி செலவாகும். கூடுதலாக 17 தூண்கள் அமைக்கப்படும். மேம்பாலத்தின் அனைத்து பணிகளும் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது உதவி என்ஜினீயர் மணிகண்டன் உடன் இருந்தார்.


Next Story