‘சிம்கார்டு’ வாங்கிய வழக்கில் மாவோயிஸ்டுகள் கோர்ட்டில் ஆஜர் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம்


‘சிம்கார்டு’ வாங்கிய வழக்கில் மாவோயிஸ்டுகள் கோர்ட்டில் ஆஜர் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம்
x
தினத்தந்தி 1 March 2017 4:45 AM IST (Updated: 1 March 2017 5:00 AM IST)
t-max-icont-min-icon

வேறொருவரின் ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கிய வழக்கில் மாவோயிஸ்டுகள் பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோ‌ஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவோயிஸ்டுகள்

மாவோயிஸ்டுகள் ரூபேஸ் என்கிற ரூபன் (வயது 40). அவருடைய மனைவி சைனா (35), அனுப் மேத்யூ ஜார்ஜ் (40), கண்ணன் (39), வீரமணி (42) ஆகியோர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் கியூ பிரிவு போலீசார், மாவோயிஸ்டுகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட சிம்கார்டு குறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் போலி முகவரி கொடுத்து சிம்கார்டு வாங்கியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுகுறித்த புகார்களின் பேரில் ரூபேஸ், சைனா, அனுப் மேத்யூ ஜார்ஜ் ஆகியோர் மீது கோட்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு விசாரணை பொள்ளாச்சி ஜே.எம்.2 கோர்ட்டில் நடந்து வருகிறது.

14–ந்தேதிக்கு ஒத்திவைப்பு

இந்த நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று மாவோயிஸ்டுகள் சைனா, அனுப் மேத்யூ ஜார்ஜ் ஆகியோரை பலத்த பாதுகாப்புடன் வேனில் பொள்ளாச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு ஹரிகரன் முன்னிலையில் 3 பேரையும் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இதுதொடர்பான விசாரணை வருகிற 14–ந்தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதேபோன்று போலி ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியதாக மற்றொரு வழக்கு ரூபேஸ் மீது பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு பொள்ளாச்சி ஜே.எம். 1 மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்திற்கு எதிர்ப்பு

இதற்கிடையே ரூபேஸ் வேறொரு வழக்கில் கேரளாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளால், பொள்ளாச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டம் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி கோர்ட்டுக்கு வந்த மாவோயிஸ்டுகள் அனுப் மேத்யூ ஜார்ஜ், சைனா ஆகியோர் ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தை எதிர்த்து கோ‌ஷம் எழுப்பினார்கள். மேலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவது மக்கள் விரோதம் என்று கூறி கோ‌ஷம் போட்டதால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story