அ.தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பி விட்டு வேறு யாரை ஆட்சியில் அமர்த்த போகிறீர்கள்: செ.ம.வேலுசாமி கேள்வி
அ.தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பி விட்டு வேறு யாரை ஆட்சியில் அமர்த்த போகிறீர்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு, செ.ம.வேலுசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அ.தி.மு.க. ஒன்றிய, நகர மற்றும் சார்பு அமைப்புகள் சார்பில் காரமடை அண்ணா திடலில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் பி.டி.கந்தசாமி தலைமை தாங்கினார். சுப்பிரமணியம், கிருஷ்ணன், கந்தசாமி, மனோகரன், முத்துராமலிங்கபாண்டி, சாவித்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் டி.டி.ஆறுமுகசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி பேசியதாவது:–
ஜெயலலிதா விட்டு சென்ற இந்த இயக்கத்தை, அ.தி.மு.க. ஆட்சியை பாதுகாக்க வேண்டியது தொண்டர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை. ஏழை, எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் ஜெயலலிதா. தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப் பட வேண்டும் என்பதற்காக தான் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார்.
என்ன வித்தியாசம்ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் முதல்–அமைச்சராக 60 நாட்கள் ஆட்சி செய்த ஓ.பன்னீர்செல்வம், அப்போது ஏன் விசாரணை கமிஷன் வேண்டும் என்று கூறவில்லை. மு.க.ஸ்டாலினும் இதையே கூறுகிறார். உங்களுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம்.
மத்திய மந்திரி வெங்கையா நாயுடு எந்தவித தவறும் நடக்கவில்லை என்று கூறுகிறார். ஒருசிலர் வேண்டும் என்றே தவறான தகவலை பரப்பி வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பொய்யான தகவலை கூறுவார்களா?. ஜெயலலிதா, தான் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று கூறிய பிறகு, யாராவது வெளியிடுவார்களா?.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு கேள்விநமது கட்சியை சேர்ந்த ஒருசிலர் தி.மு.க.வினரிடம் சிக்கிக்கொண்டு உள்ளனர். அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்திட நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து, பாடுபட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்பி விட்டு வேறு யாரை ஆட்சியில் அமர்த்த போகிறீர்கள்?. இதற்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத்தொடர்ந்து கட்சியின் தலைமை கழக பேச்சாளர் ஈரோடு ஏ.சுப்பிரமணியம் உள்பட பலர் பேசினார்கள். கூட்டத்தில் மணிமேகலை, மகேந்திரன், மேட்டுப்பாளையம் நகர செயலாளர் வான்மதி சேட், சாரமேடு பெருமாள், துரைசாமி, ரமேஷ், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பி.பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். பாஸ்கர் தலைமையிலான கலைத்தாய் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது.