புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் பணபரிவர்த்தனை பாதிப்பு
புதுச்சேரியிலும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.300 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வாராக்கடன்களுக்கு வங்கி உயர் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும், வங்கித்துறையில் மத்திய அரசு எடுத்து வரும் சீர்திருத்தங்களை கைவிட வேண்டும், நிரந்தர வேலைவாய்ப்புகளை அயலக சேவைக்கு விடுவதை (அவுட் சோர்சிங்) அனுமதிக்கக் கூடாது, பணமதிப்பு நீக்க நடவடிக்கை காலத்தில் கூடுதல் நேரம் பணியாற்றிய ஊழியர்களுக்கு இழப்பீடு வாங்கவேண்டும், அடுத்தகட்ட சம்பள விகிதத்தை புதுப்பிக்க நடவடிக்கைக மேற்கொள்ள வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு மத்திய அரசை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
ரூ.300 கோடிக்கு பாதிப்புஇந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதிலும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியிலும் நேற்று வேலை நிறுத்தம் நடந்தது. இந்த போராட்டத்தில் புதுவை மாநிலத்தில் உள்ள பல்வேறு வங்கிகளில் பணியாற்றி வரும் சுமார் 2 ஆயிரம் வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர். இதனால் புதுவையில் ரூ.300 கோடி மதிப்பிலான பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து அவர்கள் சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஸ்டேட் வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் தலைவர் கருணாகரன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் சுந்தரவரதன், பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க தலைவர் கருணாகரன், அதிகாரிகள் சங்க தலைவர் குணசேகரன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் பிரேம்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.