திருப்பூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணபரிவர்த்தனை பாதிப்பு
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 384 வங்கிகள் இயங்கவில்லை. இதனால் ரூ.1000 கோடி பணபரிவர்த்தனையில் பாதிப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாள் வேலை என அறிவிக்க வேண்டும். ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட காலகட்டத்தில், பல மணிநேரம் கூடுதலாக பணியாற்றிய ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். இந்த சமயத்தில் உயிரிழந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வந்தது.
இது தொடர்பாக மத்திய அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், வங்கி ஊழியர்கள் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொது மற்றும் அரசுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பழைய தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
384 வங்கிகள் இயங்கவில்லைஅந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் நடந்த போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள 384 வங்கிகள் இயங்கவில்லை. இந்த வங்கிகளில் பணியாற்றும் 3,300 வங்கி ஊழியர்கள், அதிகாரிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் நாள்தோறும் பணபரிவர்த்தனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஒரு நாள் போராட்டத்தால் வங்கிகளின் பணபரிவர்த்தனையில் முற்றிலும் தடை ஏற்பட்டது. தொழில்துறையினர் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.
வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வங்கி ஊழியர் சங்கங்களில் கூட்டமைப்பின் திருப்பூர் கிளை சார்பில் ரெயில் நிலையம், ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் முருகேசன், பெலிக்ஸ் பால்ராஜ், உமாநாத், ராதாகிருஷ்ணன், சேகர் உள்பட வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரூ.1000 கோடி பண பரிவர்த்தனை பாதிப்புஇந்த போராட்டத்தின் காரணமாக திருப்பூர் மாவட்டத்தில் ரூ.1000 கோடிக்கு பணபரிவர்த்தனையில் பாதிப்பு ஏற்பட்டதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டத்தால் வங்கிக்கு சென்ற வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஏ.டி.எம்.மையங்களில் பணம் நிரப்பப்படவில்லை. இதனால் ஏ.டி.எம்.களில் இருந்த பணம் நேற்று காலையில் தீர்ந்து விட்டது. அதன்பின்னர் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்றவர்களுக்கு பணம் கிடைக்கவில்லை.