கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வர்த்தகம் பாதிப்பு
கோவையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஒரே நாளில் ரூ.300 கோடி வர்த்தகம் இழப்பு ஏற்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி, அதிகாரிகள்– ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (ஏ.ஐ.பி.ஓ.சி.) சார்பில் அகில இந்திய அளவில் வங்கிகள் வேலை நிறுத்தம் நேற்று நடந்தது. கோவை மாவட்டத்திலும் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
வேலை நிறுத்தத்தையொட்டி கோவை ரெயில்நிலையம் அருகில் உள்ள பரோடா வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாவட்ட வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு தலைவர் மனோகர் தலைமை தாங்கினார். கூட்டமைப்பை சேர்ந்த மீனாட்சி சுப்பிரமணியன், வணங்காமுடி, தனபால், சசீதரன், மகேஸ்வரன், செல்வக்குமார் ஆகியோர் பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊழியர்கள் நலனுக்கு எதிராக தொழிலாளர் நலச்சட்டங்களை மாற்றக்கூடாது, 11–வது இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தை தேவையற்ற நிபந்தனைகள் இல்லாமல் சுமூகமான முறையில் நடைபெற வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு வருமானவரி விலக்கு அளிக்க வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக வரைமுறைப்படுத்த வேண்டும்.
ஊதியம் வழங்க வேண்டும்பணமதிப்பிறக்க நடவடிக்கையால் இரவு, பகல் பாராமல் வேலை செய்த ஊழியர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க வேண்டும். பண மதிப்பு நீக்கத்தின் போது வங்கிகள் மீது திணிக்கப்பட்ட கூடுதல் நிதிச்சுமையை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். வங்கி அதிகாரிகளுக்கு பணிக்கொடை உச்சவரம்பை நீக்க வேண்டும்.
வங்கி அதிகாரிகளுக்கான அடுத்த ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு இணையான ஓய்வூதியத்தை வங்கி அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும். மத்திய அரசின் வழிமுறையில் உள்ள வாரிசு வேலை வாய்ப்புகள் வங்கிகளில் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, யூகோ வங்கி, சென்ட்ரல் பாங்க்ஆப் இந்தியா, பரோடா வங்கி உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறை வங்கி ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்புஇந்த வேலை நிறுத்தம் குறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் ஒருசில தனியார் வங்கிகளை தவிர அனைத்து வங்கிகளும் இயங்கவில்லை. 650 வங்கிகளில் 3,500 வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலைக்கு செல்லவில்லை. இதன் மூலம் கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.300 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர ரூ.250 கோடி வரை காசோலை பரிவர்த்தனை நடக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.