விழா மேடையில் பேசிக் கொள்ளாத கவர்னர்– முதல்– அமைச்சர்
புதுவை கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது.
புதுச்சேரி,
புதுவை கவர்னருக்கும், அமைச்சரவைக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. கவர்னர் குறித்து அமைச்சர்கள் வெளிப்படையாக குற்றஞ்சாட்டுவதும், அதற்கு கவர்னர் சமூக வலைதளங்கள் மூலம் பதில் அளிப்பதும் புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்தநிலையில் புதுவை காவல்துறையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கான பயிற்சி நிறைவு விழா கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள முதல்–அமைச்சர் நாராயணசாமி வந்தார். அவர் வந்த சிறிது நேரத்தில் கவர்னர் கிரண்பெடியும் விழா மேடைக்கு வந்தார். அவருக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி வணக்கம் தெரிவித்தார்.
இதன்பின் விழா மேடையில் இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். ஆனால் மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர் வரும்வரை இருவரும் ஒரு வார்த்தைக்கூட பேசிக்கொள்ளவில்லை. இது விழாவுக்கு வந்தவர்கள் மத்தியில் பனிப்போர் தொடர்பான முணுமுணுப்பை ஏற்படுத்தியது.