காராமணி பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க நடவடிக்கை மத்திய மந்திரி உறுதி
காராமணி பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் அதிர் விவசாயிகளிடம் கூறினார்.
புதுச்சேரி கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த போலீசாரின் தேர்ச்சி அணிவகுப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் அதிர் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கார் மூலம் மத்திய மந்திரி சென்னைக்கு புறப்பட்டுச்சென்றார்.
சென்னை செல்லும் வழியில் திருக்கனூர் அருகே சோரப்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த டாக்டர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் படுக்கை வசதி, மருந்தகம் ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார்.
விவசாயிகளிடம் குறைகேட்டார்இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை மத்திய மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் அதிர் பார்வையிட்டு, அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டார். அப்போது விவசாயிகள், கடந்த ஆண்டு மழை பெய்ததால் இப்பகுதியில் சுமார் 70 எக்டேர் பரப்பளவில் மணிலா, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, நெல் ஆகியவற்றை பயிர்செய்தோம்.
ஆனால் இந்த ஆண்டு மழை பெய்யாமல் வறட்சி காணப்படுகிறது. இதை சமாளிக்க காராமணி பயிர் செய்துள்ளோம். கடந்த ஆண்டு காராமணி பயிர் ஒரு குவிண்டால் ரூ.8,500 முதல் ரூ.10 ஆயிரம் வரை விலைபோனது. எனவே இந்த ஆண்டு அதிக விலை கிடைக்கும் என்று பயிர் செய்துள்ளோம். ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை, தற்போது ஒரு குவிண்டால் ரூ.2,500 முதல் ரூ.3 ஆயிரம் வரையே விலை போகிறது. போதிய விளைச்சல் இல்லாமலும், விலை கிடைக்காமலும் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம் என்றனர்.
இதனை கேட்டறிந்த மத்திய மந்திரி, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். ஆய்வின்போது காராமணி செடிகளை பிடுங்கி, மத்திய மந்திரியிடம் விவசாயிகள் காண்பித்தனர்.
குறைந்தபட்ச ஆதரவு விலைபின்னர் நிருபர்களுக்கு ஹன்ஸ்ராஜ் கங்காராம் அதிர் கூறுகையில், ‘புதுவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சென்னை செல்லும் வழியில் விவசாயிகளை சந்திக்க முடிவு செய்தேன். இதற்காக இங்கு வந்துள்ளேன். விவசாயிகளுக்கு போதுமான அளவில் உரங்கள் கிடைக்கிறதா?, தண்ணீர் இருக்கிறதா? என்று அறிந்துகொள்ள வந்தேன். விவசாயிகளை சந்தித்து குறைகேட்டபோது, காராமணி பயிருக்கு போதிய விலை இல்லை என்று தெரிவித்தனர். மற்ற பயிர்களுக்கு இருப்பதுபோல் காராமணி பயிருக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுவை மாநிலத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட விரைவில் மத்திய குழு வர இருக்கிறது’ என்றார்.
ஆய்வின்போது வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன், வேளாண்துறை இயக்குனர் ராமமூர்த்தி, துணை இயக்குனர் ரவிபிரகாஷ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் உடனிருந்தனர்.