கோப்புகளை பார்ப்பதால் விவசாயம் வளராது: வேளாண்துறை அதிகாரிகள் களப்பணிக்கு செல்ல வேண்டும் நாராயணசாமி கண்டிப்பு
வேளாண்துறை அதிகாரிகள் அலுவலகத்தில் அமர்ந்து கோப்புகளை பார்ப்பதால் மட்டும் விவசாயம் வளர்ந்து விடாது. அவர்கள் களப்பணிக்கு சென்று பார்வையிட வேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுவை அரசின் வேளாண்துறை சார்பில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் தாவரவியல் பூங்காவில் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் அரசு மீது விவசாயிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
இந்தநிலையில் வேளாண்துறை அதிகாரிகள், அலுவலர்களுடன் முதல்–அமைச்சர் நாராயணசாமி, வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துரையாடினார்கள். அப்போது வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.
நாராயணசாமிஅதைத்தொடர்ந்து முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–
விவசாயத்தை பொறுத்தவரை நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. வேளாண்துறை அதிகாரிகளின் வேலை என்பது உட்கார்ந்து பார்க்கும் வேலை இல்லை. கிராம சேவக்குகள் செய்யும் வேலை அளவுகூட அதிகாரிகள் செய்வதில்லை.
புதுவையில் 10 ஆயிரம் ஹெக்டேர் விளைநிலம் உள்ளது. காரைக்கால் விவசாயிகள் காவிரி நீரை பெரிதும் நம்பியுள்ளனர். அதிகாரிகள் விவசாயம் சம்பந்தமாக பாடப்புத்தகத்தில் படித்ததோடு சரி. அதை விவசாயிகளிடம் கொண்டு செல்வதில்லை. சந்திப்பதற்குகூட சில அதிகாரிகள் விவசாயிகளுக்கு நேரம் கொடுப்பதில்லை.
நிமிர்த்த முடியவில்லைமார்க்கெட்டிங் கமிட்டி உள்ளிட்ட பலவற்றுக்கு பல கோடி மானியம் கொடுக்கிறோம். அதை விவசாயிகளுக்குக்கூட நேரடியாக கொடுத்துவிடலாம். பாசிக் நிறுவனத்துக்கு மானியமாக பணம் பெறுகிறார்கள். ஆனால் அந்த நிறுவனத்தை நிமிர்த்த முடியவில்லை.
எங்களிடம் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். நாங்கள் திருத்திக்கொள்கிறோம். நீங்களும், நாங்களும் மக்களுக்காகத்தான் பாடுபடுகிறோம். புதுவையில் பெருமளவு விவசாய நிலம் இருந்தபோதும் கோவை, பெங்களூரு, ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து காய்கறிகளை வாங்கித்தான் வினியோகிக்கிறோம்.
களப்பணிக்கு செல்ல வேண்டும்பெரும்பாலும் நாம் செய்வதை யாரும் விமர்சனம் செய்யாத அளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் இப்போது நமது செயல்பாடுகளை விமர்சனம் செய்கிறார்கள். கடந்த காலங்களில் விவசாய கடன் தள்ளுபடி என்று அறிவிப்பு செய்வார்கள். ஆனால் கடன் தள்ளுபடியாகாது. ஆனால் நாம் ரூ.22 கோடியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அறிவித்தபடி இலவச மின்சாரத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறோம். அதிகாரிகள் அலுவலகத்தில் அமர்ந்து கோப்புகளை பார்ப்பதால் விவசாயம் வளராது. களப்பணிக்கு அவர்கள் செல்ல வேண்டும். கோப்புகளை பார்க்கும் வேலையை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் செய்துகொள்வார்கள்.
புதிய அத்தியாயம்நமது மாநிலத்தில் புதிய அத்தியாயத்தை நாம் ஆரம்பிப்போம். விதிப்படிதான் எதையும் செய்யவேண்டும். அதிகாரிகள் தங்களுக்கு கீழ் உள்ள அலவலர்களுக்கு பொறுப்புகளை பிரித்து கொடுக்கவேண்டும். நான் எத்தனையோ கிராமங்களுக்கு சென்று வருகிறேன். ஆனால் ஒரு அதிகாரியைக்கூட களப்பணியில் பார்த்தது இல்லை.
நம்மிடம் 15 ஆயிரம் ஹெக்டேர் நிலம் உள்ளது. ஏராளமான அதிகாரிகளும் உள்ளனர். அப்படி இருந்தும் விவசாய உற்பத்தி பெருகவில்லை. விவசாயிகளுக்கு நம் மீது நம்பிக்கை இல்லை. கிராமப்புற மக்கள் நகரம்போக்கி குடிபெயர்கிறார்கள். விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. இதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் வேளாண்துறை இயக்குனர் ராமமூர்த்தி உள்பட அதிகாரிகள், ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.